அதிமுக கூட்டணியில் பாஜக ஆதிக்கமா? 'தாமரை'-யை நாடும் சிறிய கட்சிகள்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2016-ஆம் ஆண்டு சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்ட நிலை அடுத்த 10 ஆண்டுகளில் மாறியுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளில் சில தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது.

தமாகா, புதிய நீதிக்கட்சி (ஓரிடத்தில் மட்டும்) ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் களம் காண்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக செல்வாக்கு செலுத்துவதாக எதிர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துகிறதா? இதுகுறித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் என்ன சொல்கின்றன? அந்த கட்சிகள் கூறும் காரணம் என்ன?

தமாகா, புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்தில் போட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்காமல் தாமரை சின்னத்தில் நிற்பது ஏன் என்ற கேள்விக்கு ஜி.கே.வாசன் நேற்று (மார்ச் 27ஆம் தேதி) விளக்கமளித்தார்.

"கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுக கூட்டணியில் நீடித்தது. தேர்தல் நெருங்கும்போது எங்களுக்குக் கிடைக்கக்கூடிய சைக்கிள் சின்னம், தற்போது போலவே அப்போதும் கிடைக்கவில்லை. அதன் அடிப்படையிலேயே நேரடியாகக் கூட்டணி அமைத்திருந்த அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டோம். அதுதான் கூட்டணிக்கு உள்ள நியாயமும்கூட.

இந்த முறை தேர்தல் ஆணையத்தில் பல முறை கோரிக்கைகளை வைத்தும், வழக்கு தொடர்ந்தும், சைக்கிள் சின்னம் வழங்க முடியாது என்று கூறப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவுடனான கூட்டணிக்கு த.மா.கா மாறியது. அப்போது பாமகவும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தது.

தற்போது இந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காத நிலையில், நாங்கள் நேரடியாகக் கூட்டணியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்," என்றார் அவர்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் அதிமுக வழங்கிய ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜகவுக்கு வழங்கப்பட்ட 27இல் ஒரு தொகுதியைத் தங்களுக்கு வழங்கியிருப்பதால் அதில் தாமரை சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மார்ச் 27ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூட்டணிக்கு தலைமை பற்றி எழும் விமர்சனங்கள்

கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சீராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ள ஓ. பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணிக்கு உண்மையில் தலைமை தாங்குவது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகவும், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையிலேயே ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருந்தால், கூட்டணிக் கட்சிகள் ஏன் மற்றொரு கட்சியின் சின்னத்தைத் தேர்வு செய்கின்றன? இத்தகைய முடிவுகள் கூட்டணி விவகாரங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது" என்றும் அவர் விமர்சித்தார்.

இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் சின்னத்தைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.

அதிமுக கூறுவது என்ன?

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் எவ்வித கட்டாயத்தையும் தங்களது கட்சி அளிக்கவில்லை என்று கூறுகிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல்.

"இதுவரைக்கும் அதிமுக பெரும்பான்மை பெற தேவையான இடங்களுக்கு குறைவாக போட்டியிட்டதே கிடையாது. எனவே, பெரும்பான்மையாக எங்கு வர வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும், அதற்குரிய பணிகளைப் பார்த்துக் கொள்வோம். அதைத் தாண்டி, எங்கள் கூட்டணியின் ஒரேயொரு குறிக்கோள் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும்தான். அது தவிர்த்து, யார் எந்தச் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பன போன்ற அந்தந்த கட்சிகளின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்," என்று தெரிவித்தார் அவர்.

மேலும், "அதிமுக 169 இடங்களில் போட்டியிடுகிறது, அதில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எங்களுக்கு பயமோ பதற்றமோ கிடையாது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தெளிவாக யார், எந்தச் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதில் எவ்வித கட்டாயமும் இல்லை என்பதைத் தெரிவித்துள்ளார்" என்றும் கூறினார்.

"எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை, இரட்டை இலை, தாமரை, மாம்பழம, குக்கர் என அனைத்து சின்னங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது." எனவும் பாபு முருகவேல் குறிப்பிட்டார்.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

பாஜக கூறுவது என்ன?

யார் எந்த சின்னத்தில் நிற்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகள் என்று கூறும் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "எங்களது கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கென ஒரு பொதுவான சின்னம் இல்லாத காரணத்தால் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளன" என்றார்.

ஜி.கே.வாசன் சின்னம் குறித்துப் பேசும்போது தாங்கள் நேரடியாக பாஜகவுடனேயே கூட்டணியில் இருக்கும் காரணத்தால்தான் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறினார். அதைக் குறிப்பிட்டுக் கேட்டபோது, "இது அவரவர் விருப்பம். இதை அதிமுக-வும் வேறாகப் பார்க்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க அதில் தவறேதும் இல்லை," என்று கூறினார்.

கூட்டணியில் பாஜக ஆதிக்கமா?

எனினும், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் போன்ற தலைவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதை கூட்டணியில் பாஜகவின் ஆதிக்கம் இருப்பதை காட்டுவதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கூட்டணிக் கட்சிகளிடையே செலுத்தும் செல்வாக்கைவிட தனக்கென வாங்கப்படும் தொகுதிகளில் அது வெளிப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் பாஜக அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"பாஜக பெற்றுக்கொண்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால், அவற்றில் பலவும் அதிமுக தோல்வியடைந்த தொகுதிகள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பாஜக 27, ஜி.கே.வாசன் 5, ஏ.சி.சண்முகம் ஒன்று ஆகியவை போக வேறு யாராவது தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 33 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது சாதாரண விஷயம் இல்லைதான். இதில் பாஜகவின் செல்வாக்கு வேலை செய்துள்ளது," என்று கூறுகிறார் ப்ரியன்.

தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் பெரிய தாக்கம் எதுவும் இருந்துவிடப் போவதில்லை எனக் கூறும் அவர், "த.மா.கா போட்டியிடும் 5 தொகுதிகளில் ராணிப்பேட்டை, ஈரோடு மேற்கு, ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகள் மிகுந்த சவால்களைக் கொண்டவை. பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் பலவற்றில் அதற்கு செல்வாக்கு பெரியளவில் இல்லை. எனவே தொகுதி எண்ணிக்கையில் பாஜக தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அவற்றை ஒதுக்கிய விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி சாமர்த்தியமாகச் செயல்பட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.

ஆனால், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளவை வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகள் என்று கூறப்படுவது தொடர்பாகப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "234 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியடையப் போகிறார்கள். அப்படியிருக்கும்போது நாங்கள் தோல்வியைத் தழுவுவதற்கான முகாந்திரமே இல்லை," என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு