You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டனின் "அரசியல் செல்வாக்கை" மறுவரையறை செய்த சூயஸ் நெருக்கடி - அதிகாரம் கைமாறிய வரலாறு
- எழுதியவர், லாரி மில்னர்
- பதவி,
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
உலகளாவிய வர்த்தகப் பாதைகள் தடங்கல்களைச் சந்திப்பதாலும், மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிப்பதாலும், சூயஸ் கால்வாயின் மூலோபாய முக்கியத்துவம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
கப்பல் போக்குவரத்துத் தாமதங்கள் முதல் எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் வரை, சமீபத்திய நிகழ்வுகள், இந்தக் குறுகிய நீர்வழிப் பாதையின் மீதான கட்டுப்பாடு உலகளாவிய அதிகார இயக்கவியலை வடிவமைத்த ஒரு கடந்த காலத்தை எதிரொலிக்கின்றன.
கடந்த 1956ஆம் ஆண்டின் சூயஸ் நெருக்கடி ஒரு பிராந்திய மோதல் மட்டுமல்ல. அது ஏகாதிபத்திய செல்வாக்கு, தேசியம் மற்றும் சர்வதேச கூட்டணிகளை மறுவரையறை செய்த ஒரு திருப்புமுனையாகும். இந்த நெருக்கடி எப்படி, ஏன் உருவானது என்பதைப் புரிந்துகொள்வது, அதன் இன்றைய முக்கியத்துவத்தை விளக்குகிறது.
கால்வாய் உருவாக்கம்
கடந்த 1854ஆம் ஆண்டில், பிரான்சின் முன்னாள் தூதரான ஃபெர்டினாண்ட் டி லெசெப்ஸ், எகிப்தின் வைஸ்ராய் முகமது சயீத்தை ஒரு கப்பல் போக்குவரத்து கால்வாய் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு சம்மதிக்க வைத்தார்.
இந்தக் கால்வாய், ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் வகையில், சுமார் 100 மைல் பாலைவனத்தின் வழியாகச் செல்வதாகத் திட்டமிடப்பட்டது.
இதற்குப் பிறகு, ஒரு முன்மொழிவு முதலீட்டாளர்களுடன் பகிரப்பட்டது. 1858 டிசம்பர் 20ஆம் தேதியன்று, கால்வாயைக் கட்டுவதற்காக 'சூயஸ் கடல்வழி கால்வாய்க்கான உலகளாவிய நிறுவனம்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில், இந்தப் பிராந்தியத்தில் பிரான்சின் வளர்ந்து வந்த செல்வாக்கை பிரிட்டன் நம்பவில்லை. எனவே, பிரிட்டன் அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்க மறுத்தது. அது மற்றவர்கள் முதலீடு செய்வதைத் தடுக்கவும் முயன்றது. இதன் விளைவாக முதலீட்டாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக, எகிப்து மட்டுமே 44% பங்குகளை வாங்கியது.
கால்வாய் கட்டுமானம் 1859ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கியது. பல வருடப் பணிகளுக்குப் பிறகு, இந்தக் கால்வாய் இறுதியாக நவம்பர் 1869இல் திறக்கப்பட்டது. அதன் நுழைவாயிலில், துறைமுகத்தைப் பார்த்தவாறு ஃபெர்டினாண்ட் டி லெசெப்ஸின் ஒரு பெரிய சிலை இருந்தது.
கால்வாய் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே, முகமது சயீத் 1867இல் காலமானார். அவருக்குப் பிறகு அவரது மருமகனான இஸ்மாயில் பாஷா பதவியேற்றார்.
கால்வாய் திறக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே, அதைப் பயன்படுத்திய கப்பல்களில் சுமார் முக்கால்வாசி (75%) பிரிட்டிஷ் கப்பல்களாக இருந்தன. 1870களின் நடுப்பகுதியில், இஸ்மாயில் பாஷா எகிப்தை நவீனமயமாக்க முயன்றார். ஆனால் இது பெரும் கடன்களுக்கு வழிவகுத்தது. நிதிப் பிரச்னைகள் காரணமாக, கால்வாயில் எகிப்தின் பங்குகளை விற்க அவர் முடிவு செய்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி, எகிப்தின் பங்குகளை நான்கு மில்லியன் பவுண்டுக்கு வாங்கினார். இது பிரிட்டனுக்கு இந்த மிக முக்கியமான நீர்வழிப் பாதையின் மீது வலுவான கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் அளித்தது.
பிரிட்டனின் முக்கிய நலன்
சூயஸ் கால்வாய் பிரிட்டனுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஏனெனில், அது அதன் பேரரசுக்கு ஒரு குறுகிய கடல்வழிப் பாதையை வழங்கியது. 20ஆம் நூற்றாண்டு தொடங்கி, எண்ணெய் அதிக முக்கியத்துவம் பெற்றபோது, இந்தக் கால்வாய் பாரசீக வளைகுடாவின் எண்ணெய் வயல்களுக்கு ஒரு குறுகிய பாதையையும் வழங்கியது. இதன் காரணமாக, பிரிட்டன் இந்தக் கால்வாயைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தது.
முதல் உலகப் போரின்போது, இந்தக் கால்வாய் தாக்குதலுக்கு உள்ளானது. போர் தொடங்கிய உடனேயே, பிரிட்டன் எகிப்தை ஒரு பாதுகாப்பு நாடாக ஆக்கி, கால்வாயைப் பாதுகாக்க பிரிட்டிஷ் மற்றும் இந்திய படைகளை அனுப்பியது. 1914இல் ஜெர்மனியின் கூட்டாளியாகப் போரில் இணைந்த துருக்கி, பிப்ரவரி 1915இல் கால்வாயைக் கைப்பற்ற முயன்றது. ஆனால், அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
கடந்த 1916ஆம் ஆண்டுக்குள், மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, பிரிட்டிஷ் பாதுகாப்பு அரண்கள் சினாய் பாலைவனத்திற்குள் ஆழமாகத் தள்ளப்பட்டிருந்தன. 1918இல் துருக்கி தோற்கடிக்கப்பட்டது. மேலும் ஓட்டோமான் பேரரசின் பெரும்பகுதி பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையில் பிரிக்கப்பட்டது. இது தற்போதைய இராக்கில் உள்ள எண்ணெய் வயல்களின் கட்டுப்பாட்டை பிரிட்டனுக்கு வழங்கியது.
கடந்த 1922இல், பிரிட்டன் எகிப்துக்கு பெயரளவிலான சுதந்திரத்தை வழங்கியது. ஆனால் அது தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டது. 1936இல் ஆங்கிலோ-எகிப்திய ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் எகிப்தை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தது. ஆனால் பிரிட்டனின் நிதி மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக, 1956 வரை சூயஸ் கால்வாய் பகுதியில் பிரிட்டிஷ் படைகள் தங்கியிருக்க அனுமதித்தது. அதன் பிறகு, அவர்களின் இருப்பு மறுபரிசீலனை செய்யப்படும்.
இரண்டாம் உலகப் போரின்போது, கால்வாய் மீண்டும் ஆபத்தை எதிர்கொண்டது. ஜெர்மனியின் நட்பு நாடான இத்தாலி, லிபியாவில் இருந்து எகிப்தை தாக்கியது. டிசம்பர் 1940இல், பிரிட்டிஷ் மற்றும் காமன்வெல்த் படைகள் இத்தாலியர்களை வெளியேற்றின.
ஆனால், மார்ச் 1941இல் அவர்கள் ஜெர்மனியின் ஆப்பிரிக்கா கோர்ப்ஸின் உதவியுடன் திரும்பி வந்து நேச நாடுகளின் படைகளைப் பின்னுக்குத் தள்ளினர். 1942ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை வட ஆப்பிரிக்க கடற்கரையோரம் சண்டை தொடர்ந்தது. அப்போது அச்சு நாடுகளின் படைகள் கால்வாயை நெருங்கிவிட்டதாகத் தோன்றியது. ஜுலை 1, 1942 அன்று ஒரு பெரிய தாக்குதல் தொடங்கி, அந்த மாதத்தின் பெரும்பகுதி வரை நீடித்தது. ஆனால் நேச நாடுகளின் படைகள் தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொண்டன.
ஆகஸ்ட் 1942இல், பெர்னார்ட் மான்ட்கோமெரி பிரிட்டிஷ் எட்டாவது ராணுவத்தின் தளபதியானார். 1942 அக்டோபர் 23ஆம் தேதியன்று, அவர் எல் அலமைனில் இருந்து ஒரு பெரும் தாக்குதலைத் தொடுத்தார். அது ஜெர்மானிய-இத்தாலிய ராணுவத்தைப் பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தியது.
அதன் சிறிது காலத்திலேயே, நவம்பர் 8ஆம் தேதி, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க படைகள் மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவில் தரையிறங்கி, துனிசியாவில் இருந்த அச்சு நாடுகளின் படைகளைத் துண்டித்தன. மே 13, 1943 அன்று, அந்தப் படைகள் சரணடைந்தன. அதையடுத்து, கால்வாய் மீண்டும் பாதுகாப்பான நிலையை அடைந்தது.
சூயஸ் நெருக்கடி
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எகிப்தில் தேசியவாதம் அதிகரித்ததன் காரணமாக சூயஸ் நெருக்கடி தொடங்கியது. 1951இல் தேசியவாத வஃப்ட் கட்சியின் தலைவரான நஹாஸ் பாஷா, ஆங்கிலோ-எகிப்திய ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
இதற்குப் பிறகு எகிப்தில் இருந்த பிரிட்டிஷ் வீரர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. ஜனவரி 1952இல் வன்முறையைத் தூண்டிய எகிப்திய துணை ராணுவ காவல்துறையினரை நிராயுதபாணியாக்குவதற்காக, இஸ்மாயிலியாவில் ஒரு நடவடிக்கைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது.
அந்த நடவடிக்கை வெற்றி பெற்றது, ஆனால் வன்முறை நிற்கவில்லை. விரைவில், கெய்ரோவில் மிகப்பெரிய கலவரங்கள் வெடித்தன. 1952 ஜனவரி 26ஆம் தேதி, சனிக்கிழமையன்று, அங்கிருந்த பிரிட்டிஷ் சொத்துகள் மற்றும் வெளிநாட்டினர் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த நாள் பின்னாட்களில், "கறுப்பு சனிக்கிழமை" என்று அறியப்பட்டது.
பின்னர் கெய்ரோவின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக பிரிட்டன் அச்சுறுத்தியது. இந்த அழுத்தம் காரணமாக, மன்னர் ஃபாரூக், நஹாஸ் பாஷாவை அதிகாரத்தில் இருந்து நீக்கினார். ஆனால் நிலைமை சீரடையவில்லை. ஜூலை 1952இல் மன்னர் ஃபாரூக் ஒரு ராணுவப் புரட்சியின் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஜெனரல் முகமது நெகிப் ஆட்சிக்கு வந்தார்.
கடந்த 1936ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் பிரிட்டனுக்கு இருந்த உரிமைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் அந்தோனி ஈடன் புதிய எகிப்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை எடுத்தார்.
கடந்த 1954ஆம் ஆண்டில், ஜெனரல் நெகிப்புக்கு பதிலாக கமால் அப்தெல் நாசர் தலைவரானார். அவருக்கு மூன்று முக்கிய இலக்குகள் இருந்தன. அவை,
- பிரிட்டிஷ் ராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் எகிப்தை முழுமையாகச் சுதந்திரமாக்குவது
- இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட எகிப்தின் ராணுவத்தை வலுப்படுத்துவது
- நைல் நதியின் நீரைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்துவதற்காக அஸ்வானில் ஒரு பெரிய அணையைக் கட்டுவதன் மூலம் எகிப்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது
கடந்த 1954ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி, நாசருக்கும் அப்போதைய பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த அந்தோனி நட்டிங்கிற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஏழு ஆண்டுகளுக்கு நீடிக்கவிருந்தது.
அந்த ஒப்பந்தத்தின்படி, பிரிட்டிஷ் படைகள் ஜூன் 1956ஆம் ஆண்டுக்குள் எகிப்தைவிட்டு வெளியேற வேண்டும். அதன் பிறகு, பிரிட்டிஷ் ராணுவத் தளங்கள் பிரிட்டிஷ் மற்றும் எகிப்திய குடிமைப் பணியாளர் தொழில்நுட்ப வல்லுநர்களால் கூட்டாக நிர்வகிக்கப்படும். சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் தடையின்றிச் செல்ல எகிப்து ஒப்புக்கொண்டது. எந்தவொரு வெளிநாட்டினாலாவது கால்வாய்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பிரிட்டிஷ் படைகள் திரும்பி வரலாம் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
சூயஸ் கால்வாயை தன்வசப்படுத்திய எகிப்து
பிப்ரவரி 1955இல் பிரிட்டன், எகிப்து இடையிலான உறவு மீண்டும் பதற்றத்தை எதிர்கொண்டது. எகிப்திய தலைவர் கமால் அப்தெல் நாசருக்கு தான் முன்னதாக வாக்களித்திருந்த ஆயுதங்களை வழங்கப் போவதில்லை என்று அந்தோனி ஈடன் முடிவெடுத்ததே இதற்குக் காரணமாக அமைந்தது.
ஏப்ரல் 1955இல், வின்ஸ்டன் சர்ச்சிலிடம் இருந்து பொறுப்பேற்று, அந்தோனி ஈடன் பிரிட்டனின் பிரதமரானார்.
இந்தக் காலகட்டத்தில், எகிப்தில் இருந்து கடைசி பிரிட்டிஷ் வீரர்கள் வெளியேறிக் கொண்டிருந்த வேளையில், கமால் அப்தெல் நாசர் சொக்கோஸ்லோவாக்கியாவிடம் இருந்து விமானங்கள், டாங்கிகள், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருந்தார். இந்த ஆயுதங்கள் சோவியத் ஒன்றியத்தால் தயாரிக்கப்பட்டவை. இவை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டுமென்ற தனது முக்கிய இலக்குகளில் ஒன்றை அடைய அவருக்கு உதவக் கூடியவையாக இருந்தன.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எகிப்தில் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், ஜனவரி 1956இல் அஸ்வான் நகரில் ஒரு பெரிய அணையைக் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் ஒப்புக் கொண்டிருந்தன.
பின்னர், அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொண்டது. அந்த அணைத் திட்டம் வெற்றி பெறாது என்று அது கருதியது. மேலும், வெளிநாடுகளுக்கு அளிக்கும் நிதியுதவியைக் குறைத்துக் கொள்ளவும் அது விரும்பியது. எகிப்து சோவியத் ஆயுதங்களை வாங்குவது குறித்த கவலையும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.
ஜூலை 19, 1956 அன்று, அணைத் திட்டத்திற்காக அமெரிக்கா நிதியுதவி அளிக்காது என்று ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் வாஷிங்டனில் இருந்த எகிப்து தூதரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் செல்வின் லாயிடும் பிரிட்டனின் நிதியுதவியை விலக்கிக் கொண்டார். பின்னர், எகிப்துக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த 200 மில்லியன் டாலர் கடனை வழங்க உலக வங்கியும் மறுத்துவிட்டது.
இந்தக் காரணங்கள் அனைத்தினாலும், ஜூலை 26, 1956ஆம் தேதி, கமால் அப்தெல் நாசர் சூயஸ் கால்வாயின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்திக் கொண்டார். இந்தக் கால்வாய் முன்னதாக பிரிட்டிஷ், பிரெஞ்சு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தச் செயல் கால்வாயை "தேசியமயமாக்குதல்" என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கால்வாய் மூலம் ஈட்டப்படும் வருவாய் இனி அஸ்வான் அணையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
இந்த முடிவு பிரிட்டனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. 1930களில் அடால்ஃப் ஹிட்லருடனான மோதலைத் தவிர்க்க பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகள் எவ்வாறு தோல்வியடைந்தன என்பதை அந்தோனி ஈடன் நினைவுகூர்ந்தார். எனவே, நாசரை பதவியில் இருந்து அகற்றி, அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக, எகிப்துக்கு எதிராக ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார்.
இருப்பினும், நியாயப்படுத்த முடியாத எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக எச்சரித்தது.
ஒப்பந்தங்களும் ரகசிய திட்டங்களும்
கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, உலகம் மிக வேகமாக மாறத் தொடங்கியது.
கடந்த 1948ஆம் ஆண்டில், இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு விரைவில், முதல் அரபு-இஸ்ரேலிய போர் மூண்டது. அதே நேரத்தில், அரபு தேசியவாத உணர்வுகள் வலுவடைந்தன. இதன் காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியம் மிகவும் பதற்றமான, நிலையற்ற ஒரு பகுதியாக மாறியது.
போருக்குப் பிறகு அமெரிக்கா மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாடாக உருவெடுத்தது. அது ஒரு காலத்தில் தானே ஒரு காலனி நாடாக இருந்ததால், நாடுகள் சுதந்திரம் பெறுவதை (காலனித்துவ நீக்கம்) அது ஆதரித்தது. அதே நேரத்தில், சோவியத் ஒன்றியம் ஆதரவளித்து வந்த கம்யூனிச சித்தாந்தம் பரவுவது குறித்து அமெரிக்கா கவலையடைந்தது. இதை அமெரிக்கா ஜனநாயகத்திற்கு ஓர் ஆபத்தாகவே கருதியது.
மத்திய கிழக்கில் சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக, பிரிட்டன், துருக்கி, இராக், இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 1955ஆம் ஆண்டில் 'பாக்தாத் ஒப்பந்தம்' என்ற ஒன்றைச் செய்துகொண்டன.
இருப்பினும், எகிப்து இந்த ஒப்பந்தத்தில் இணைய மறுத்துவிட்டது. ஏனெனில் அது ஆயுதங்களுக்காக சோவியத் ஒன்றியத்தையே சார்ந்திருந்தது. பின்னர் இராக் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது. அதன் பிறகு, இந்த அமைப்பு 'மத்திய ஒப்பந்த அமைப்பு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இந்த அமைப்பு வலுவிழந்து போனதுடன், பனிப்போர் காலப் பதற்றங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் பரவுவதைத் தடுக்கவும் தவறிவிட்டது.
கடந்த 1956ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், காய் மொல்லட் பிரான்ஸ் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். சுதந்திரத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருந்த அல்ஜீரியாவில் அமைதியை நிலைநாட்டுவதாக அவர் உறுதியளித்தார்.
ஆனால் அங்கே ஒரு பெரிய சிக்கல் இருந்தது. சுமார் பத்து லட்சம் பிரெஞ்சு குடியேறிகள் அங்கு வசித்து வந்தனர். இதன் காரணமாக, பிரான்ஸால் அல்ஜீரியாவை அவ்வளவு எளிதாகக் கைவிட்டு வெளியேற முடியவில்லை. பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அங்குள்ள சூழல் மேலும் வன்முறை நிறைந்ததாக மாறியது.
அதே நேரத்தில், எகிப்து தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறித்து இஸ்ரேல் கவலையடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் அடிக்கடி மோதல்களும் நிகழ்ந்து வந்தன. இதன் விளைவாக, இஸ்ரேல் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுதங்களையும் போர் விமானங்களையும் வாங்கத் தொடங்கியது.
இந்தச் சூழல் குறித்து பிரெஞ்சு அரசாங்கம் இஸ்ரேலுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் பிரிட்டனையும் அழைத்தனர்.
கடந்த 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள 'செவ்ரேஸ்' என்ற இடத்தில் மொல்லட், அந்தோனி ஈடன், இஸ்ரேலின் டேவிட் பென்-குரியன் ஆகிய மூன்று தலைவர்களும் ரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர்.
இந்த ரகசிய சந்திப்பின்போது அவர்கள் ஒரு திட்டத்தை வகுத்தனர். அதாவது, இஸ்ரேல் முதலில் எகிப்து மீது தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதலை ஒரு காரணமாகக் கொண்டு, பிரிட்டனும் பிரான்ஸும் சூயஸ் கால்வாய் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தும். இவ்வாறாக சூயஸ் மீதான ஆங்கிலோ-பிரெஞ்சு படையெடுப்புக்கு திட்டம் வகுக்கப்பட்டது.
ராணுவ நடவடிக்கை
ரகசிய திட்டம் தீட்டப்பட்ட பிறகு, எகிப்தின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகுமாறு டேவிட் பென்-குரியன், மோஷே டயானுக்கு உத்தரவிட்டார். 1956 அக்டோபர் 29ஆம் தேதியன்று, இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.
மிட்லா கணவாய் எனப்படும் ஒரு முக்கிய இடத்தைக் கைப்பற்றுவதற்காக, வானில் இருந்து பாராசூட் வீரர்கள் இறக்கப்பட்டதன் மூலம் இந்த நடவடிக்கை தொடங்கியது. இதற்குப் பிறகு, கடுமையான மோதல் நடந்தது.
மறுநாள், பிரிட்டனும் பிரான்சும் இரு தரப்பினரையும் உடனடியாக சண்டையை நிறுத்தும்படி கூறின. ஆனால் இஸ்ரேல் நிறுத்தவில்லை. எகிப்து திருப்பித் தாக்கும் என எதிர்பார்த்து, அவர்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். இருப்பினும், எதிர்த் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, கமால் அப்தெல் நாசரின் ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது.
நாசர் சூயஸ் கால்வாயை கைப்பற்றிய மூன்று மாதங்கள் மற்றும் 10 நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 5ஆம் தேதி, பிரிட்டனும் பிரான்சும் அந்தக் கால்வாய் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கின.
தரைப் படைகளை அனுப்புவதற்கு முன்பு, அவர்கள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இந்த வான்வழித் தாக்குதல்கள் எகிப்தின் பெரும்பாலான விமானப் படையை அழித்து, எகிப்திய விமானங்கள் திருப்பித் தாக்குவதைத் தடுத்தன.
சூரியன் உதயமான சிறிது நேரத்திலேயே, பாராசூட் படைப் பிரிவின் 3வது பட்டாலியனை சேர்ந்த பிரிட்டிஷ் வீரர்கள் எல் காமில் விமான தளத்தில் வானில் இருந்து தரையிறக்கப்பட்டனர். அதே நேரத்தில், பிரெஞ்சு பாராசூட் வீரர்கள் ராஸ்வா பாலங்களுக்கு அருகிலும், போர்ட் ஃபுவாடிலும் தரையிறங்கினர்.
விமான தளத்தில் இருந்த எகிப்திய படைகள் 45 நிமிடங்களுக்கு உள்ளாகவே தோற்கடிக்கப்பட்டன. பின்னர், ராயல் நேவி ஹெலிகாப்டர்கள் பொருட்களைக் கொண்டு வரத் தொடங்கின.
எல் காமில் பகுதியைப் பாதுகாத்த பிறகு, பிரிட்டிஷ் பாராசூட் வீரர்கள் போர்ட் சயீத் நோக்கி நகர்ந்தனர். அந்த வழியில், அவர்கள் முதல் முறையாகக் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தனர். விமானங்களின் ஆதரவுடன், அவர்கள் மீண்டும் எகிப்திய படைகளைத் தோற்கடித்தனர்.
இருப்பினும், அவர்கள் அன்றிரவு அங்கேயே தங்கி நிலையைத் தக்கவைத்தனர். ஏனெனில் கடலில் இருந்து மேலும் படைகள் தரையிறங்குவதற்கு முன்பு, அடுத்த நாள் போர்ட் சயீத் கடற்கரைப் பகுதியில் குண்டுவீச்சு நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.
நவம்பர் 6ஆம் தேதியன்று, கடல் மற்றும் வான்வழியாக ஒருங்கிணைந்த தாக்குதல் தொடங்கப்பட்டது.
ராயல் கடற்படை கமாண்டோக்கள், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வான்வழிப் படைகளுடன் இணைந்து, பிரிட்டிஷ் டாங்கிகளின் ஆதரவுடன், எகிப்திய படைகளை விரைவாகத் தோற்கடித்தனர். அவர்கள் வீரர்கள், வாகனங்கள் மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து எகிப்து வாங்கியிருந்த பல புதிய ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
நவம்பர் 6 நள்ளிரவில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் போரை நிறுத்த வலியுறுத்தியதால் இது நிகழ்ந்தது.
அதற்குள், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகள் எல் கேப்பை அடைந்திருந்தன. ஆனால் அவர்கள் சூயஸ் கால்வாய் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்பே, சண்டையை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ராணுவ கண்ணோட்டத்தில், அந்த நடவடிக்கை மிகச் சிறப்பாகவும், ஒரு பெரும் வெற்றியாக அமைவதற்கு மிக நெருக்கமாகவும் சென்று கொண்டிருந்தது.
அரசியல் ரீதியாக தோல்வியடைந்த சூயஸ் படையெடுப்பு
சூயஸ் கால்வாய் மீதான ராணுவ தாக்குதல் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருந்தாலும், அரசியல் ரீதியாக அதுவொரு பெரிய தோல்வியாக அமைந்தது.
அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்னோவர் இந்தத் தாக்குதல் குறித்து மிகவும் கோபம் கொண்டார். உலக நாடுகள் பலவும் இதை எதிர்த்தன. அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சோவியத் யூனியன் இதில் தலையிடக் கூடும் என்ற அச்சுறுத்தலும் இருந்தது.
இந்த அழுத்தம் காரணமாக, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல், எகிப்தில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயின. பிரிட்டனுக்கு உள்ளேயேகூட, பலர் கோபமடைந்து போருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த ஐ.நா சபை ஓர் அமைதிப் படையை அனுப்பியது. போர் நிறுத்தம் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, அமைதியை மீட்டெடுப்பதே அவர்களின் பணியாக இருந்தது.
பின்னர், சூயஸ் கால்வாய் சீரமைக்கப்பட்டு கப்பல்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் இந்த நெருக்கடி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா உடனான பிரிட்டனின் உறவு பலவீனமடைந்தது. மேலும், "சூயஸுக்கு கிழக்கே" உள்ள பிராந்தியங்களில் (மத்திய கிழக்கு, ஆசியா போன்ற பகுதிகள்) அதன் செல்வாக்கு குறைந்தது.
அதன் பிறகு, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து ரகசியமாகத் தாக்குதலைத் திட்டமிட்டதாக மக்கள் குற்றம் சாட்டத் தொடங்கினர். இந்தக் குற்றச்சாட்டுகள் 1956இல் தொடங்கின. இருப்பினும், பிரிட்டிஷ் பிரதமர் அந்தோனி ஈடன் நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தெளிவான பதிலைக் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர், இஸ்ரேலின் தாக்குதல் பற்றி பிரிட்டனுக்கு முன்கூட்டியே தெரியுமா என்று அவரிடம் நேரடியாகக் கேட்கப்பட்டது. டிசம்பர் 20 அன்று, ஹன்சார்டில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட, காமன்ஸ் அவையில் அவர் ஆற்றிய உரையில், "முன்னறிவு குறித்த கேள்விக்கு, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். மேலும் இதை இந்த அவையிடம் மிகவும் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். இஸ்ரேல் எகிப்தை தாக்கும் என்பது பற்றி முன்கூட்டியே எதுவும் தெரிந்திருக்கவில்லை." என்று கூறினார்.
ஜனவரி 1957இல், அந்தோனி ஈடனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருந்தது. அவரது நற்பெயரும் கடுமையாகச் சேதமடைந்தது. இதன் காரணமாக, அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரஞ்சு பிரதமர் காய் மொல்லட், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், மேலும் சிறிது காலம் பதவியில் நீடித்தார். ஆனால், அல்ஜீரிய போருக்கான செலவுகளை ஈடுகட்ட அவர் அறிமுகப்படுத்திய புதிய வரிகளின் காரணமாக, அவரது அரசாங்கம் ஜூன் 1957இல் கவிழ்ந்தது.
சூயஸ் நெருக்கடி பிரிட்டன், அமெரிக்கா இடையிலான உறவையும் சேதப்படுத்தியது. ஆனால், பனிப்போரின்போது வட அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பில் அவர்கள் கூட்டாளிகளாகத் தொடர்ந்து இணைந்து பணியாற்றினர். 1962ஆம் ஆண்டுக்குள், பிரிட்டன் அமெரிக்காவில் இருந்து போலாரிஸ் ஏவுகணை அமைப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தது.
இருப்பினும், இந்த நெருக்கடி ஒரு பெரும் உண்மையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உண்மையான உலகளாவிய அதிகாரம் கைமாறியிருந்தது. பிரிட்டன் முன்பைப் போல வலிமை வாய்ந்ததாக இல்லை. அதன் சர்வதேச நற்பெயர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
- வரலாற்றாசிரியர் லாரி மில்னர் எழுதிய இந்தக் கட்டுரை, கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிபிசியில் வெளியிடப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு