You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரண வழக்கு - 17 நாட்கள் கடந்தும் போராட்டம் நடைபெறுவது ஏன்?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடம் தரலாம்.
மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இதில் தொடர்புடையதாக கருதப்படும் காவலர்கள் மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யக் கோரி அவரது உடலை வாங்க மறுத்து 17வது நாளாக குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே "இறந்த உடலை வைத்து அரசியல் செய்வது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை "ஆகாஷ் உடலைப் பெற்றுக்கொண்டு கண்ணியமாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
வழக்கின் பின்னணி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் மார்ச் 6ம் தேதி நள்ளிரவில் ஜீவா நகரை சேர்ந்த ஜெயக்குமார் (35), ஆதனூரைச் சேர்ந்த அழகர் (33) ஆகியோர் தாக்கப்பட்டனர். பட்டாகத்தி மற்றும் அரிவாளால் இவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) மற்றும் கோபி என இருவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை பிடிக்க முயன்றபோது ஆகாஷ் "மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார், இதனால் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது", என காவல்துறையினரின் அறிக்கை கூறுகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 8ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் உயிரிழந்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆகாஷ் குடும்பத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு இடையே மார்ச் 9ஆம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
காவலர்கள் பணியிடை நீக்கம்
ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலை காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலை காவலர் மனோகரன் ஆகிய 6 காவலர்களை கடந்த 13ம் தேதி சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி உட்பட 11 காவல்துறையினருக்கு சிபிசிஐடி கடந்தவாரம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
மானாமதுரை டிஎஸ்பி ராஜா, ஆயய்வாளர்கள் திலீபன் (திருப்புவனம்), குமாரவேல் பாண்டியன் (மானாமதுரை), உதவி ஆய்வாளர் குகன், ஏட்டு தெய்வேந்திரன், போலீசார் இருளப்பன், காளீஸ்வரன், மகேந்திரன், முத்துப்பாண்டி மற்றும் மாவட்ட எஸ்.பியின் தனிப்பிரிவு எஸ்.ஐ முத்துராஜா, ஏட்டு முனீஸ் குமார் ஆகிய 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இவர்களில் ஒருசிலர் மட்டும் ஆஜராகவில்லை.
உடலை வாங்க மறுப்பது ஏன்?
கொலை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட காவலர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து கடந்த 17 நாட்களாக ஆகாஷ் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "சிவகங்கை இளைஞர் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்யவும், தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல்துறையினரை முழுமையாக பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இது வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது," மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் இறந்த உடலை வைத்து அரசியல் செய்வது ஏன், உடலை வைத்து போராட்டம் நடத்துவது, சமீப காலத்தில் ஒரு வழக்கமாக உள்ளது விசாரணை அதிகாரிக்கு தேவையில்லாமல் அழுத்தம் கொடுப்பது ஏற்புடையது அல்ல என்றும் பெற்றோரிடம் பேசி, ஆகாஷ் உடலைப் பெற்றுக்கொண்டு கண்ணியமாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்" நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த வழக்கின் மனுதாரர் செல்வகுமார், ஆகாஷ் வழக்கிற்கு சற்றும் தொடர்பு இல்லாத ஒருவர் என்கிறார் சமூக செயற்பாட்டாளர் லெனின். இவர் ஆகாஷ் மரணம் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
முன்னதாக ஆகாஷ் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. இந்த வழக்கில் "ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை மற்றும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய" மார்ச் 13ம் தேதி நீதிபதி சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.
ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் தமது மரணத்திற்கு முன்பாக அளித்த வாக்குமூலத்தில் தன் மீதான தாக்குதல்கள் குறித்து கூறியதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
ஆகாஷ் டெலிசன் பிரேத பரிசோதனை அறிக்கை
மதுரை அரசு மருத்துவமனையில் நடத்திய பிரேதப் பரிசோதனையில், ஆகாஷ் டெலிசன் உடலில் மொத்தம் 28 வகையான வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது பதிவாகியுள்ளது.
மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் , வலது காலின் நடுப்பகுதியில் உள்ள எலும்புகள் முறிந்திருந்ததாகவும், அந்த பகுதியில் தசை, நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சேதமடைந்து 45 செ.மீ × 12 செ.மீ அளவில் ரத்தம் உறைந்த காயம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கை, முழங்கை, முழங்கால் மற்றும் தொடைப் பகுதிகளில் பல இடங்களில் சிவப்பு நிற சிராய்ப்புகள் மற்றும் கீறல்கள் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உட்புற பரிசோதனையில் மூளையின் முன்பகுதியில் ரத்தக் கசிவு மற்றும் புள்ளி வடிவ ரத்தக் கசிவுகள் காணப்பட்டன. நுரையீரல் மற்றும் இதயம்வீங்கிய நிலையில் இருந்ததாகவும் பதிவாகியுள்ளது.
மருத்துவ சிகிச்சையின்போது ஏற்பட்ட ஊசி தழும்புகள் மற்றும் காயங்களும் முழங்கை மற்றும் மணிக்கட்டு பகுதிகளில் காணப்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், உயிரிழப்பிற்கான இறுதி காரணம் குறித்து இன்னும் முடிவு தெரிவிக்கப்படவில்லை. இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் திசுப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு இறுதி அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வுக்காக இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இரத்த மாதிரிகள் மதுரை மண்டல அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முழு பிரேதப் பரிசோதனை நிகழ்வும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உடலை வாங்க போவதில்லை"
"எனது மகனின் உயிரிழப்புக்கு காரணமான காவலர்களை கைது செய்யும் வரை எத்தனை நாட்கள் ஆனாலும் உடலை வாங்கப் போவதில்லை" என கூறுகிறார் உயிரிழந்த ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ் கண்ணன்.
ஆகாஷை கைது செய்யும் முயற்சியின் போது அவர் தவறி விழுந்ததாக போலீசார் கூறுவதில் உண்மை இல்லை எனக் கூறுகிறார் ராஜேஷ் கண்ணன்.
ஆகாஷை காவல் துறையினர்தான் அழைத்துச் சென்றார்கள் என கூறும் அவர்,'ஆகாஷ் உடன் பிடித்துச் செல்லப்பட்ட ஆகாஷ் நண்பன் சொல்லிதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது' தெரிய வந்தது என்றும் தெரிவித்தார்.
"காவல் நிலையத்திலிருந்து திடீரென என்னை தொடர்பு கொண்ட போலீஸ் ஒருவர், 'உங்க மகனுக்கு ஒரு ஆடை எடுத்துக்கொண்டு உடனே மருத்துவமனைக்கு வாங்க' என கூறினார். " என்கிறார் ராஜேஷ்.
இதனையடுத்து ராஜேஷ் , அவரது மனைவி ஆனந்தி, காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக உள்ள ராஜேஷின் சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகிய நால்வரும் காரில் மதுரை அரசு மருத்துவமனை நோக்கி சென்றதாகக் கூறுகிறார்.
இதனிடையே மானாமதுரை டிஎஸ்பி ராஜா தங்களை , வேறு இடத்திற்கு அழைத்து பணம் தந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார் ராஜேஷ். ஆனால் இதுபற்றிய கேள்விகளுக்கு காவல்துறை பதிலளிக்கவில்லை.
அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த போதுதான் "உங்கள் மகன் இறந்த செய்தி தெரியாதா" என காவலர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக கூறுகிறார் ராஜேஷ் கண்ணன்.
"மருத்துவமனையில் உள்ள பிணவறையில் சென்று பார்த்த போது ஆகாஷ் கால் உடைக்கப்பட்டு, கால் எலும்பு உடைந்து வெளியே தெரிந்தது. ஒருவேளை ஆகாஷ் உயிர் பிழைத்திருந்தாலும் அந்த கால்களை வைத்து நடக்க முடியாது, அந்த அளவு கொடூரமாக தாக்கி இருந்ததை நான் பார்த்தேன்." என்கிறார் அவர்.
"தனிப்படை போலீசார் உட்பட 16 பேர் ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையவர்கள். எனவே அனைவரும் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்ய வேண்டும். நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க போவதில்லை" என ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணா தெரிவித்தார்.
மகன் இறந்து 17 நாட்கள் ஆகியும் இறுதிச் சடங்கு செய்யாமல் இருப்பது மனவேதனையை தந்தாலும் தன் மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என கூறுகிறார், ஆகாஷின் தாய் ஆனந்தி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், "எனது மகன் என்னிடம் தொலைபேசியில் பேசும் போது போலீசார் அழைத்துச் சென்று சித்திரவதை செய்து காலுக்கு இடையில் கற்களை வைத்து காலை உடைத்தாக சொன்னான். அது இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது." என்றார்.
மகன் இறந்து 17 நாட்கள் ஆகியும் இறுதி சடங்கு செய்யாததால் மன வேதனையின் உச்சத்தில் உள்ளதாக அவர் கூறுகிறார். "ஆனாலும், கொலை செய்தவர்களை கைது செய்யாமல் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தாலும் அவன் ஆத்மா சாந்தி அடையாது. அடித்துக் கொலை செய்த காவலர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என ஆகாஷின் தாய் ஆனந்தி கேட்டுக்கொண்டார்.
சமூக செயற்பாட்டாளர் லெனின் பேசுகையில்,"பிணையில் வெளியே வர முடியாத எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை ஏன் காவல்துறையினர் கைது செய்யப்படவில்லை?" என கேள்வியெழுப்பினார்.
திருப்புவனம் அஜித் குமார் காவல் மரணம், சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் உள்ளிட்டவற்றில் வழக்குப் பதிவு செய்த மறுநாளே சம்பந்தப்பட்ட காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆகாஷ் மரண வழக்கில் இதுவரை சம்பந்தப்பட்ட காவலர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்புகிறார்.
காவல்துறை கூறுவது என்ன?
இது குறித்து ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணனிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, "ஆகாஷ் உயிரிழப்பு தொடர்பாக காவலர்கள் சிலர் பணியிடை நீக்கம் மற்றும் ஒரு சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளதால் காவல்துறையால் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது" என்றார்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?
கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?
உங்கள் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படாது அல்லது வெளியாளுடன் பகிரப்படாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு