You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
3 விக்கெட், 3 கேட்ச், 3 அதிரடி இன்னிங்ஸ்: ஆர்சிபியின் சாதனை வெற்றிக்கு காரணமான 3 விஷயங்கள்
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது.
பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த சீசனின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தற்காலிக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் 200+ இலக்கை ஒரு அணி செய்த அதிவிரைவான சேஸ் இதுதான்.
இந்தப் போட்டியில் ஆர்சிபி பௌலர் ஜேக்கப் டஃபியின் பவர்பிளே ஸ்பெல், ஃபில் சால்ட்டின் சிறப்பான ஃபீல்டிங் மற்றும் அந்த அணி பேட்டர்களின் அதிரடி பேட்டிங் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக விளங்கின.
டஃபி 3 விக்கெட்
அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவதற்குத் தயாராக இருந்தார் டஃபி. அப்போது வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டஃபி பற்றி "டி20 உலகக் கோப்பையில் டஃபியைப் போன்ற எண்கள் கொண்டிருந்தால், மறுபடியும் இங்கு வந்து பந்துவீசுவது எளிதாக இருக்காது. அவர் இங்கு தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் யாருக்கு எதிராகப் பந்துவீசப் போகிறார் என்று பாருங்கள்… இது அவருக்கு மிகமிகக் கடினமாக இருக்கப்போகிறது." என்று கூறினார்:
பீட்டர்சன் அப்படிச் சொன்னதுக்குக் காரணம் இருந்தது...
சுமார் 20 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜேக்கப் டஃபிக்கும் நியூசிலாந்தின் பிற பௌலர்களுக்கும் எதிர்பார்த்துபோல் செல்லவில்லை.
அன்று ஆமதாபாத்தில் 3 ஓவர்கள் பந்துவீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார் டஃபி. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் டஃபியின் பந்துவீச்சை பதம்பார்த்தார்கள்.
அந்த செயல்பாட்டுக்குப் பின் ஜேக்கப் டஃபி விளையாடிய போட்டி இது. மறுபடியும் இந்தியாவில்… மறுபடியும் அபிஷேக்கிற்கு எதிராக.
ஆனால், இவை மட்டுமே அவர் மீதான நெருக்கடியாக இருக்கவில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில் டஃபி அறிமுகம் ஆனதற்கான காரணம், ஜாஷ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியோடு இல்லாதது.
2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி கோப்பை வென்றதற்கான மிகமுக்கியக் காரணமாக விளங்கியவர் ஹேசில்வுட். அந்த சீசனில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் டாப் விக்கெட் டேக்கராக விளங்கினார். அப்படியொரு தாக்கம் ஏற்படுத்திய வீரரின் இடத்தில் விளையாடியதால், ஹேசில்வுட் கொடுத்தது போன்ற செயல்பாடு எதிர்பார்க்கப்படும் என்ற நெருக்கடியும் டஃபி மீது இருந்தது.
ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அனைவருமே பீட்டர்சன் சொன்னது போலத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால், அப்படியொரு நிலையில் தான் டஃபியிடமிருந்து பெங்களூருவில் 'ஆட்ட நாயகன்' செயல்பாடு வந்தது.
பவுன்ஸ் அதிகமாக இருந்த அந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டிகளில் வீசுவதைப்போல் ஷார்ட் மற்றும் குட் லென்த்களுக்கு இடைப்பட்ட லென்த்திலேயே அதிகம் பந்துவீசினார் டஃபி. அவருடைய உயரத்தின் காரணமாக அவரது பந்துகள் கூடுதல் பவுன்சாக காரணமாக அமைந்தன. அதனால் அவர் பந்துவீச்சில் அடித்து ஆடுவது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது.
முதல் ஓவரிலேயே அபிஷேக்குக்கு எதிராக ஒரு வாய்ப்பை உருவாக்கியிருந்தார் டஃபி. ஆட்டத்தின் மூன்றாவது பந்தில், பந்து பேட்டை விட்டு சற்று தள்ளிச் சென்றதால் அவுட் ஆகாமல் தப்பித்தார் அபிஷேக் ஷர்மா. ஆனால், டஃபி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இம்முறை டஃபி வீசிய ஷார்ட் பாலை அவர் பலமாக அடிக்க நினைக்க, பந்து டாப் எட்ஜாகி கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா கைகளில் விழுந்தது.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டஃபிக்கு எதிராக 9 பந்துகளை சந்தித்த அபிஷேக் அதில் 29 ரன்கள் விளாசினார். அந்த அளவுக்கு டஃபிக்கு எதிராக அதிரடி காட்டினார் இந்திய ஓப்பனர் அபிஷேக். ஆனால், இந்த ஐபிஎல் போட்டியில் அபிஷேக்குக்கு எதிராக 5 பந்துகள் வீசி, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அவர் விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார் டஃபி.
அதே ஓவரின் கடைசிப் பந்தில் அவர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் வீழ்த்தினார். 'பேக் ஆஃப் லென்த்' பந்தை ஹெட் தூக்கி அடிக்க, டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் இருந்த ஃபில் சால்ட் அதை கேட்ச் பிடித்தார்.
டஃபி வீசிய மூன்றாவது ஓவரில், இன்னொரு ஷார்ட் லென்த் பாலுக்கு இன்னொரு விக்கெட் கிடைத்தது - அவருடைய மூன்றாவது விக்கெட். மணிக்கு சுமார் 134 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்தில் நித்திஷ் குமார் பெரிய ஷாட் அடிக்க முயற்சிக்க பந்து டாப் எட்ஜாகி மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த அபிநந்தன் சிங் கைகளில் தஞ்சமடைந்தது.
தொடர்ந்து கடினமான அந்த டெஸ்ட் போட்டி லென்த்களில் வீசி பேட்டர்களுக்குக் கடுமையான சவால் கொடுத்தார் டஃபி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரிடமிருந்து எதிர்பார்த்தது இதைத்தான்: ஹேசில்வுட் செய்யும் அதே வேலை.
சில தினங்களுக்கு முன்பு, மினி ஏலத்துக்கு தாங்கள் தயாரானது பற்றிய வீடியோக்களை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியிட்டது. அதில் ஜேக்கப் டஃபியை வாங்கும் முடிவுக்கு வந்த விவாதங்கள் பற்றியும் பார்க்க முடிந்தது. அதில், ஹேசில்வுட்டுக்கு மாற்றாக அவர்கள் வாங்க நினைத்த முதல் வீரர் ஜேக்கப் டஃபி. ஹேசில்வுட் போல் உயரமான வீரர் என்பதால், அவரைப் போலவே உயரத்திலிருந்து பந்தை ரிலீஸ் செய்வார் என்பதாலும், சமீபமாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பதாலும், அவரையே முதல் இலக்காக வைத்திருந்தார்கள். அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கும் வாங்கினார்கள். அறிமுக போட்டியில், ஹேசில்வுட் போன்ற தாக்கத்தையே டஃபி ஏற்படுத்திவிட்டார்.
டஃபியின் செயல்பாடு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் வேகப்பந்துவீச்சாளருமான யோமஹேஷ், "ஹேசில்வுட் இந்தப் போட்டியை ஆடியிருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதையே டஃபி செய்தார். ஆனால், இது எளிதான விஷயம் இல்லை. ஆர்சிபி போன்ற ஒரு நடப்பு சாம்பியன் அணிக்கு வந்து, ஹேசில்வுட் போன்ற ஒரு உலகத்தர வீரரின் இடத்தை நிரப்பும்போது பெரும் நெருக்கடி ஏற்படும். அதை சமாளித்து டஃபி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "அவர் தெளிவான ஒரு திட்டத்தோடு வந்திருந்தார். சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் பந்துவீசும்போது பவுன்ஸ் சற்று கூடுதலாகக் கிடைக்கும். சீம் மூவ்மென்ட் இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். மேலும், அபிஷேக் & ஹெட் இருவருக்கும் எதிராக அவர் ஒரேயொரு தவறான பந்தை மட்டுமே வீசினார். மற்றபடி பேட் (pad) லைனில் வீசி அவர்களுக்கு சவால் கொடுத்தார். ஒரு சரியான திட்டத்தைத் தீட்டி அதை சரியாக அரங்கேற்றவும் செய்தார்" என்றும் யோமஹேஷ் கூறினார்.
சால்ட் பிடித்த 3 கேட்ச்கள்
ஒரு விக்கெட் கீப்பர் ஃபீல்டிங்கில் ஜொலிப்பது அதிகம் பார்த்திட முடியாத விஷயம். அரிதாகவே நடப்பது. கீப்பிங் கடினம் என்றாலும், அதற்கென்று ஒரு எல்லை இருக்கிறது. கிளவுஸ் போட்டுக்கொண்டு, அதிகம் நகராமல் களத்தில் செயல்படும் கீப்பர்கள், அந்த கிளவுஸ் இல்லாமல் மைதானத்தின் முழு பரப்பிலும் செயல்படுவது முற்றிலும் வேறுபட்டது.
ஆனால், விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் ஃபீல்டிங் செய்வது கடினமே இல்லாத ஒரு விஷயம் என்பதைப் போல் காட்டியிருக்கிறார். சன்ரைசர்ஸுக்கு எதிராக அவர் பிடித்த 3 கேட்ச்கள் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
டிராவிஸ் ஹெட் அடித்த பந்து அவர் இடுப்பு உயரத்துக்கு வந்தது. விரைந்து வந்த பந்தின் வேகத்தை சரியாகக் கணித்து, தன் உயரத்தைக் குறைத்து 'ரிவர்ஸ் கப்' முறையில் சிறப்பாக அந்தப் பந்தைப் பிடித்தார் அவர்.
கிளாசன் கேட்சை சால்ட் பிடித்தது விவாதத்துக்கு உட்படக்கூடியதுதான். சிலர் அவர் பவுண்டரி எல்லையைத் தொடவில்லை என்றும், சிலர் அவர் தொட்டுவிட்டார் என்றும் கருதுகிறார்கள்.
அது எப்படியாக இருந்தாலும், சால்ட் அதைப் பிடித்த விதம் அசாத்தியமானது. அவர் முதலில் நின்றிருந்த இடத்துக்கும் பவுண்டரி எல்லைக்கும் பெரிய இடைவெளி இல்லை. அப்படியொரு நிலையில் அவர் பின்னால் தன் உடல் பாரத்தைத் தள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது அவரையும் பின்னுக்குத் தள்ளியது. பவுண்டரி எல்லையுடனான இடைவெளி குறைவாக இருக்கும்போது அதைத் தாண்டாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆனால், பின்னால் அப்படியே கரணம் அடித்து எல்லையைத் தாண்டாமல் மைதானத்துக்குள்ளேயே இருந்தார் சால்ட்.
அவர் பிடித்த மூன்றாவது கேட்ச் அதையெல்லாம் விடக் கடினமானது. இஷான் கிஷன் அடித்த பந்தை டீப் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் நின்றிருந்த அவர் வலது புறம் ஓடி ஒற்றைக் கையை நீட்டி டைவ் அடித்துப் பிடித்தார் அவர். யாருமே அப்படியொரு கேட்ச் பிடிக்கப்படும் என்று நினைத்திருக்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்லாதும் ஆர்சிபி வீரர்களுமே கூட அதை ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனுமே பார்த்தார்கள்.
ஹெட், கிளாசன், கிஷன் என மூன்றுமே மிகப் பெரிய விக்கெட்டுகள். அதிலும் கிளாசன் மற்றும் கிஷன் இருவரும் நன்கு ஆடிக்கொண்டிருந்த வீரர்கள். அந்தத் தருணங்களில் அப்படியான கடினமான கேட்ச்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் சன்ரைசர்ஸின் ஸ்கோர் இன்னும் உயர்ந்திருக்கும்.
அதிரடியான 3 இன்னிங்ஸ்கள்
202 ரன்களை சேஸ் செய்த ஆர்சிபி அதை 15.4 ஓவர்களிலேயே எட்டி ஐபிஎல் சாதனை படைத்திருக்கிறது. அந்த அணியின் ரன்ரேட்டும் பெருமளவு (+ 2.907) அதிகமாகியிருக்கிறது. இந்தப் பெரும் வெற்றிக் காரணம் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் மற்றும் ரஜத் பட்டிதார் ஆடிய அதிரடி ஆட்டம்.
மூன்றாவது வீரராகக் களமிறங்கிய படிக்கல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத்தான் இன்னிங்ஸைத் தொடங்கினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த அவர் டேவிட் பெய்ன், ஹர்ஷல் பட்டேல், நித்திஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட் என அனைவரின் பந்துவீச்சையும் அடித்து ஆடினார். அவருடைய 'டைமிங்' மிகச் சிறப்பாக இருந்தது. 21 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஒருவகையில் படிக்கலை விடவும் வேகமாக ஆடினார். அவர் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அதீத அதிரடி காட்டும் பட்டிதார், இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதே மாதிரியான அதிரடியைக் காட்டினார். அவர் அடித்த 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே ஸ்பின்னுக்கு எதிராக வந்தது.
படிக்கல் 234.61 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிச் சென்றிருக்க, பட்டிதாரோ 258.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருந்தார். அவர் அவுட்டானபோதே தேவைப்படும் ரன்ரேட் 6 ரன்களுக்கும் குறைவாகிவிட்டிருந்தது.
கடைசி கட்டத்தில் விராட் கோலியுமே அதே அதிரடியைக் கையில் எடுத்து வழக்கம்போல் போட்டியை ஆர்சிபி-க்கு முடித்துக் கொடுத்தார். ஆரம்ப கட்டத்தில் சற்று நிதானமாக விளையாடியவர் மெல்ல ரன் ஸ்கோரிங் ரேட்டைக் கூட்டி ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 64வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
இந்த 3 அதிரடி இன்னிங்ஸ்கள் ஆர்சிபி அணி இந்த அதிரடி சேஸை அரங்கேற்றி சிறந்த ரன்ரேட்டும் பெற உதவியது.
தங்கள் அணியின் அதிரடி பேட்டிங் பற்றிப் பேசிய கேப்டன் பட்டிதார், "சரியான திட்டமிடல் என்று எதுவும் இல்லை. ஆடுகளத்தை கணித்தோம், அது நன்றாக இருந்தது, அதற்கேற்ப ஆடினோம். படிக்கல் மற்றும் கோலியின் இன்னிங்ஸ் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு