மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் தோல்வி- மூன்றாவது வெற்றியை சுவைத்தது ஆர்சிபி

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2020 சீசனின் 20வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கெடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 12) நடந்தது.

இந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ஆர்சிபி. இது இந்த சீசனில் அந்த அணியின் மூன்றாவது வெற்றி.

4 போட்டிகளில் விளையாடியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாகப் பெறும் மூன்றாவது தோல்வி இது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்குக் கம்பேக் கொடுத்த ஜாஷ் ஹேசில்வுட் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, ஃபில் சால்ட், ரஜத் பட்டிதார் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.

அதிரடி தொடக்கம்

ஆர்சிபி அணிக்கு விராட் கோலி, ஃபில் சால்ட் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்த சீசனில் இதுவரை பெரிய பங்களிப்பைக் கொடுத்திடாத ஃபில் சால்ட், இந்தப் போட்டியில் தன் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் பௌலர்களைப் பதம் பார்த்தார்.

முதல் 4 ஓவர்களில் போல்ட், பும்ரா, ஹர்திக் என அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் இந்த இணை பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்க, 43 ரன்கள் வந்தது. அதனால் ஐந்தாவது ஓவரில் ஸ்பின்னர் மிட்செல் சான்ட்னரைப் பந்துவீசச் செய்தார் ஹர்திக் பாண்டியா. ஆனால், அந்த ஓவரில் 22 ரன்கள் விளாசினார் சால்ட். முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர் அடித்தவர், நான்காவது பந்தில் பவுண்டரி அடித்தார்.

பவர்பிளேவின் கடைசி ஓவரை பும்ரா கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். பவர்பிளே முடிவில் ஆர்சிபி விக்கெட் ஏதும் இழக்காமல் 71 ரன்கள் எடுத்தது.

பவர்பிளே முடிந்த பிறகும் சால்ட் அதிரடி தொடங்கியது. மார்க்கண்டே வீசிய எட்டாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்த சால்ட், நான்காவது பந்தை சிக்ஸராக்கினார். அந்த முதல் பந்தில் பவுண்டரி அடித்தபோதே அவர் அரைசதமும் கடந்திருந்தார்.

அனைத்து பௌலர்களுக்கு எதிராகவும் விடாமல் அடித்து ஆடிய சால்ட் 11வது ஓவரில் ஷார்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். இந்த இன்னிங்ஸில் அவர் 6 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு கோலி - சால்ட் இணை 10.5 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்தது.

மிரட்டிய பட்டிதார்

வழக்கமாக நான்காவது வீரராகக் களமிறங்கும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் இந்தப் போட்டியில் மூன்றாவது வீரராக இறங்கினார். வந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தன் இன்னிங்ஸைத் தொடங்கினார் அவர். அதன்பிறகு புயல் வேகத்தில் அவர் ரன் சேர்த்தார்.

12வது ஓவரை மயாங்க் மார்க்கண்டே வீச வர, அந்த ஓவரில் தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளிலுமே சிக்ஸர்கள் விளாசினார் பட்டிதார். ஷார்துல் வீசிய அடுத்த ஓவரிலும், போல்ட் வீசிய அதற்கடுத்த ஓவரிலும் ஒரேபோல் தலா ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்தார். சான்ட்னர் வீசிய 16வது ஓவரில் பவுண்டரி அடித்து, 17 பந்துகளில் தன் அரைசதத்தை அவர் நிறைவு செய்தார். அந்த ஓவரிலேயே அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதற்கு மத்தியில், நிதானமாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் டெத் ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் ஓரளவு கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ராயல் சேலஞ்சர்ஸின் ரன்ரேட்டைக் குறைத்தார்கள். அதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஹர்திக், சான்ட்னர், ஷார்துல், போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஜஸ்ப்ரித் பும்ரா இந்தப் போட்டியிலும் விக்கெட் வீழ்த்தவில்லை. கடந்த 2025 ஐபிஎல் சீசனின் கடைசிப் போட்டி, இந்த சீசனின் முதல் 4 போட்டிகள் என தொடர்ந்து 5 ஐபிஎல் போட்டிகளாக பும்ரா விக்கெட் வீழ்த்தவே இல்லை.

ஆர்சிபி வெற்றி

பெரிய இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸுக்கு ஆரம்பம் நல்லபடியாக அமைந்தது. ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கில்டன் இருவரும் அடிப்பதற்கு ஏற்ற பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார்கள். அதனால் முதல் 5 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

இன்னிங்ஸ் நன்றாகக் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்க, ஆறாவது ஓவரின்போது காயம் காரணமாக ரோஹித் ஷர்மா ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியேறினார். இது மும்பை இந்தியன்ஸின் இன்னிங்ஸுக்கு வேகத்தடை போட்டதுபோல் அமைந்தது.

எட்டாவது ஓவரைப் பந்துவீச வந்த ஸ்பின்னர் சுயாஷ் ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத் தள்ளினார். தான் வீசிய முதல் பந்திலேயே ரிக்கில்டன் (37 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்திய அவர், ஐந்தாவது பந்தில் திலக் வர்மா (1 ரன்) விக்கெட்டையும் கைப்பற்றினார்.

அடுத்து இணைந்த மும்பை இந்தியன்ஸின் கேப்டன் - துணைக் கேப்டன் ஜோடி (ஹர்திக் & சூர்யகுமார்) ஓரளவு நம்பிக்கை கொடுக்கும் விதம் விளையாடியது. ஆனால், 47 ரன்கள் எடுத்திருந்த அந்த இணையைப் பிரித்தார் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான குருனால் பாண்டியா. 33 ரன்கள் எடுத்திருந்த சூர்யாவை அவர் வெளியேற்றினார்.

அடுத்த சில ஓவர்களில் 40 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியாவும் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து அவுட் ஆனார்.

கடைசி கட்டத்தில் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் மிரட்டலாக விளையாடினார். அவர் 31 பந்துகளைச் சந்தித்து 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 1 பவுண்டரியும், 9 சிக்ஸர்களும் விளாசினார். இருந்தாலும், அவருடைய அதிரடி தாமதமாக வந்ததால் மும்பை இந்தியன்ஸால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது.

டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். ஆடுகளம் நன்றாகத் தெரிகிறது. முதல் போட்டியை வேறொரு ஆடுகளத்தில் விளையாடினோம், இதுவும் அதைப் போலவே இருக்கிறது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்வது எப்போதும் நல்லது. இது ஒரு முக்கியமான ஆட்டம் என்று நினைக்கிறேன். களமிறங்கி எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், ஆலோசனைக் கூட்டங்களில் பேசிய விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் விளையாட்டை ரசித்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்.

நாங்கள் நல்ல ஆடுகளங்களைக் கேட்டிருந்தோம், அவை எங்களுக்குக் கிடைத்து வருகின்றன. ஒரு பந்துவீச்சாளராக பந்தைச் சரியான இடத்தில் வீசும் வரை, மற்றும் ஒரு பேட்டராகச் சரியான ஷாட்டுகளை விளையாடும் வரை, நீங்கள் போட்டியில் நிலைத்திருக்க முடியும். வான்கெடே மைதானத்தில் பல ஆண்டுகளாக, இலக்கைத் துரத்துவது பல அணிகளுக்குச் சாதகமாக இருந்துள்ளது. இது எங்களது சொந்த மைதானம் என்பதால், பிறகு பனிப்பொழிவும் இருக்கும். எனவே, எவ்வளவு ரன்களைத் துரத்த வேண்டும் என்பது தெரிந்தால், அதற்கு ஏற்ப இன்னிங்ஸைத் திட்டமிடலாம்." என்று கூறினார்.

ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், "நிச்சயமாக, நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பியிருப்போம். ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரிந்தபடி, இது பேட்டிங் செய்வதற்குச் சாதகமான ஒரு ஆடுகளம். பந்து நன்றாகப் பேட்டிற்கு வருகிறது, அதே சமயம் நல்ல பவுன்ஸும் இருக்கிறது. எனவே உண்மையைச் சொன்னால், இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்து, அவர்களை அழுத்தத்தில் வைக்க முயற்சிப்போம்.

இது எங்களது நான்காவது போட்டி. கடந்த சில போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் நிறைய நேர்மறையான விஷயங்களைக் கொடுத்துள்ளது. கடந்த போட்டியில், நாங்கள் 97 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தும், 200 ரன்களுக்கு மேல் எடுத்தோம். அது எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறி. நாங்கள் இங்கு விளையாடுவதை மிகவும் ரசிக்கிறோம். எப்போது இங்கு வந்தாலும், சிறப்பான கூட்டத்தைப் பார்க்கிறோம். இது சவாலானது, அதே நேரத்தில் வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது." என்றார்.

பிளேயிங் லெவனில் யார்?

மும்பை இந்தியன்ஸ்

இந்தப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு மாற்றங்களை செய்தது. அல்லா கசன்ஃபர் மற்றும் தீபக் சஹர் ஆகியோருக்குப் பதிலாக மிட்செல் சேன்ட்னர் மற்றும் மயாங்க் மார்க்கண்டே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கில்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், ஷார்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, மயாங்க் மார்க்கண்டே

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராகுல் ஷர்மா, அஷ்வனி குமார், ராஜ் பவா, கார்பின் பாஷ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கடந்த போட்டியில் ஆடிய வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி மீண்டும் ஆர்சிபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, சுயாஷ் ஷர்மா.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராசிக் தார், ஸ்வப்னில் சிங், ஜேக்கப் பெதெல், மங்கேஷ் யாதவ், வெங்கடேஷ் ஐயர்.

2026 சீசனில் இதற்கு முன்

இந்த சீசனில் இந்தப் போட்டிக்கு முன் ஆடிய 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் வென்ற அந்த அணி, அதன்பிறகு டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களின் முதலிரு போட்டிகளிலும் முறையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது.