காணொளி: இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள் அருகே தாக்குதல் - என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள் அருகே தாக்குதல்
காணொளி: இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள் அருகே தாக்குதல் - என்ன நடக்கிறது?

தெற்கு இஸ்ரேலில் அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள இரண்டு நகரங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தி இருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். என்ன நடந்தது?

அதிகாரிகள் கூற்றுப்படி சனிக்கிழமை மாலை டிமோனா மற்றும் அராட் நகரங்களை இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கின. இந்த தாக்குதலை அடுத்து, அராட்டில் 84 பேரும், டிமோனாவில் 78 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

டிமோனா நகருக்கு வெளியே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது தங்களுக்கு தெரியவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை கூறுகிறது. அதே நேரம், அந்தப் பகுதியில் மையத்திற்கு வெளியே உள்ள கதிர்வீச்சு அளவுகளில் எவ்வித அதிகரிப்பும் இல்லை என தங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த முகமை கூறுகிறது.

சனிக்கிழமை இரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் கூறுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு அராட் பகுதி இப்படித்தான் காட்சியளிக்கிறது.

அராட் நகரில், தாங்கள் கேட்ட வெடிப்புச் சத்தங்கள் திகிலூட்டுவதாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இது டிமோனாவில் தாக்குதலுக்குப் பிந்தைய காட்சி.

வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி இரானிய ஏவுகணைகள் எப்படி உள்ளே வந்தன என்பது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இது நாட்டிற்கு மிக கடினமான மாலைப்பொழுது என குறிப்பிட்டார்.

நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம், பேச்சுவழக்கில் டிமோனா அணு உலை என அழைக்கப்படுகிறது. இது இஸ்ரேலின் அறிவிக்கப்படாத அணு ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டிருப்பதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக, இந்தத் தளம் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே என கூறப்பட்டாலும், இஸ்ரேல் இங்கு அணு குண்டை உருவாக்கியதாக பரவலாக நம்பபடுகிரது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இதன் விளைவாக, மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே ஒரே அணுசக்தி நாடாக உள்ளது. எனவே, தங்கள் மீது குறிவைக்கப்படுவதாக வரும் எந்தவொரு அறிகுறியையும் இஸ்ரேல் மிகுந்த தீவிரத்துடனே எடுத்துக்கொள்கிறது.

இரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் திறனையும் முற்றிலுமாக ஒழிப்பதே இந்தப் போரின் முக்கிய நோக்கம் என இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறுகின்றன.

பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போரின் ஆரம்ப நாட்களில், இரானின் நடான்ஸ் இலக்கு வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற 12 நாள் போரின் போதும் இப்பகுதி குறிவைக்கப்பட்டது.

சனிக்கிழமை நடத்தப்பட்டதாக கூறப்படும் நடான்ஸ் மீதான தாக்குதலை, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை மீறும் செயல் என என இரானின் அணுசக்தி அமைப்பு கண்டித்துள்ளது. மேலும், கதிரியக்கப் பொருட்கள் ஏதும் கசிந்ததாக தகவல் இல்லை என்றும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அப்பகுதியில் ஏதேனும் தாக்குதல் நடைபெற்றதாக தங்களுக்கு தகவல் ஏதும் இல்லை என சனிக்கிழமை இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு புதிய கெடு ஒன்றை விதித்துள்ளார். அதன்படி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் இரானின் மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டிரம்ப் தனது மிரட்டலை செயல்படுத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குவோம் என இரானும் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

இதற்கிடையே மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் மீதான இரானின் தாக்குதலும் தொடர்வதாக தெரிகிறது.

சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம், நாட்டின் தலைநகரான ரியாத் திசையை நோக்கி ஏவப்பட்ட மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்ததாகத் கூறி உள்ளது. அதில் ஒன்று இடைமறிக்கப்பட்டதாகவும், மற்ற இரண்டு ஏவுகணைகள் மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும் சௌதி கூறி உள்ளது. அதே போல ஐக்கிய அரபு எமிரேட்ஸும் காலை தாக்குதல்களை இடைமறித்ததாக கூறி உள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு