You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'டி.ராஜேந்தர் முன்வைத்த 3 நிபந்தனைகள்' - ஏவிஎம் நிறுவனம் மீது வழக்கு ஏன்?
தனது படத்தின் பாடல்களை காப்புரிமைச் சட்டத்தை மீறி ஏ.வி.எம் நிறுவனம் விற்றுவிட்டதாக, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
பாடல்களை ஒலி நாடாக்கள் (audio cassettes) மற்றும் வட்டுகள் (disks) வடிவில் பயன்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே ஏ.வி.எம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக மனுவில் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
காப்புரிமையை மீறி இசை செயலிகள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் தனது பாடல்களை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இளையராஜாவை தொடர்ந்து காப்புரிமை தொடர்பாக டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தது ஏன்?
திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு 'உயிருள்ளவரை உஷா' படம் வெளியானது.
படத்தை 'தஞ்சை சினி ஆர்ட்ஸ்' என்ற பெயரில் டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தயாரித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற 'வைகைக் கரை காற்றே நில்லு...வஞ்சிதனை பார்த்தால் சொல்லு', 'இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாலோ' ஆகிய பாடல்கள் பிரபலம் ஆனது.
படம் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆடியோ பிரிவு மற்றும் டபிள்யு.எல் எபிக் மீடியா நிறுவனம் ஆகியவற்றின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ராஜேந்தரும் அவரின் மனைவி உஷாவும் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
டபிள்யு.எல் எபிக் மீடியா நிறுவனம், காஸ்மிக் மியூசிக் என்ற பெயரில் இயங்கி வந்ததாக வழக்கின் மனுவில் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான உஷா ராஜேந்தர் பல படங்களைத் தயாரித்துள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலான படங்களில் அவரது கணவரே நடித்தும் இசையமைத்தும் இயக்கியும் உள்ளதாக, வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
'படத்தின் தயாரிப்பாளருக்கு முழு காப்புரிமையும் ஒலிப்பதிவு உரிமையும் உள்ளது' எனக் கூறியுள்ள உஷா ராஜேந்தர், படத்தின் இசைப் பணிகளைப் (Musical works) பொறுத்தவரை பாடல்களை எழுதி இசையமைத்த டி.ராஜேந்தருக்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
'எந்தத் தொகையும் கொடுக்கவில்லை'
'உயிருள்ள வரை உஷா' படத்தில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கலை, எடிட்டிங், பின்னணி பாடகர், நடனம், திரைக்கதை என அனைத்து பணிகளையும் டி.ராஜேந்தரே மேற்கொண்டதாக உஷா ராஜேந்தர் கூறியுள்ளார்.
படம் வெளியான காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த ஒலி நாடாக்கள் (audio cassettes) மற்றும் வட்டுகள் (disks) வடிவில் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏ.வி.எம் நிறுவனத்துக்கு உஷா ராஜேந்தர் உரிமை வழங்கியுள்ளார்.
"அசல் ஆவணங்கள் அடிப்படையில் பாடல்களுக்கான ஒலி நாடாக்கள் எந்தளவுக்குப் பயன்படுத்தப்படுகிறதோ, அதற்கேற்ப அவ்வப்போது ராயல்டி செலுத்துவதற்கு ஏ.வி.எம் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது," என்கிறார் உஷா ராஜேந்தர்.
"இரு தரப்பிலும் ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு ஏ.வி.எம் நிறுவனம் தரப்பில் இருந்து எந்தத் தொகையும் கொடுக்கவில்லை," என மனுவில் கூறியுள்ள உஷா ராஜேந்தர், ராயல்டி செலுத்துவது தொடர்பாக ஏ.வி.எம் நிறுவனத்தைத் தாங்கள் வலியுறுத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"ஆனால், இதற்கு பதில் அளிக்காமல் ஏ.வி.எம் நிறுவனம் நழுவியதுடன் ஒருகட்டத்தில் முழு தொகையும் கொடுத்துவிடுவதாக தயாரிப்பாளரை நம்பவைக்கும் வகையில் செயல்பட்டு வந்தது," என அவர் கூறியுள்ளார்.
'ராயல்டி கொடுக்காதது சட்டவிரோதம்'
ஏ.வி.எம் நிறுவனத்திடம் இருந்து 'உயிருள்ளவரை உஷா' படத்தின் பாடல்களுக்கான உரிமையை டபிள்யு.எல் எபிக் மீடியா நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் வணிக ரீதியில் தங்கள் படத்தின் பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக உஷா ராஜேந்தர் கூறியுள்ளார்.
"பாடல்களைப் பயன்படுத்தியதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் தொகையைச் செலுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. ஆகவே, ஒப்பந்த காலம் முதல் தற்போது வரையிலான பயன்பாட்டு காலத்துக்கும் சேர்த்து தொகையைச் செலுத்துவதற்கான கடமை அவர்களுக்கு உள்ளது," என மனுவில் உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
ஒலி நாடாக்கள் (cassettes) மற்றும் வட்டுகள் (Disk) மூலமாக இசைப் படைப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைத் தவிர்த்து, படத்தின் பாடல்களை இசை செயலிகள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் பயன்படுத்தி வருவதாக மனுவில் உஷா ராஜேந்தர் குற்றம் சுமத்தியுள்ளார்.
"இவ்வாறு பயன்படுத்துவதற்கு தங்கள் தரப்பில் ஒருபோதும் அனுமதியளிக்கவில்லை" எனக் கூறியுள்ள உஷா ராஜேந்தர், 'ராயல்டி கொடுக்காமலேயே பாடல்கள் பயன்படுத்திக் கொண்டது சட்டவிரோதம் என்ற நிலையில், பிற தளங்களில் பயன்படுத்தியதும் சட்ட விரோதம்' எனக் கூறியுள்ளார்.
டி.ராஜேந்தர் முன்வைத்த 3 நிபந்தனைகள்
"இசையை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சமமான பங்கைப் பெறுவதற்கு அப்பணியை மேற்கொண்ட இசையமைப்பாளருக்கு முழு உரிமை உள்ளது" என்கிறார் உஷா ராஜேந்தர்.
கடந்த 10.12.2024 அன்று ஏ.வி.எம் நிறுவனத்துக்கு இதுதொடர்பாக உஷா ராஜேந்தர் மற்றும் டி.ராஜேந்தர் தரப்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் மூன்றுவிதமான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
- 'உயிருள்ள வரை உஷா' படத்தின் பாடல்களை எந்தவொரு டிஜிட்டல் தளத்திலும் பயன்படுத்துவதில் இருந்து விலக வேண்டும்.
- ஏ.வி.எம் நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்ட தேதி முதல் தற்போது வரையிலான காலகட்டம் வரை பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ஆண்டுவாரியான கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.
- இவ்வளவு ஆண்டுகளாக எந்தவித தொகையும் செலுத்தாமல் அங்கீகரிக்கப்படாத வகையில் பாடல்களைப் பயன்படுத்தியதற்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும்.
'தாங்கள் அனுப்பிய இந்த நோட்டீஸ் மீண்டும் தங்களுக்கே திரும்பி வந்துவிட்டதாக மனுவில் உஷா ராஜேந்தர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு டபிள்யூ எல் எபிக் மீடியா நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு டபிள்யூ எல் எபிக் மீடியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், பல்வேறு திரைப்படங்களின் பாடல்களை ஏ.வி.எம் நிறுவனத்திடம் இருந்து தாங்கள் பெற்றதாகவும் அந்தப் பட்டியலில் 'உயிருள்ளவரை உஷா' படமும் இருந்ததாகக் கூறியுள்ளது.
இதனை மனுவில் குறிப்பிட்டுள்ள உஷா ராஜேந்தர், 'ஆனால், குறிப்பிட்ட படத்தின் உரிமையை டபிள்யூ எல் எபிக் மீடியா நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம், ஏ.வி.எம் நிறுவனத்துக்கு இருந்ததா?' என்பதை விளக்கத் தவறிவிட்டதாக கூறியுள்ளார்.
படத்தின் இசை மற்றும் பாடல்கள் மீதான காப்புரிமையை தாங்களே பெற்றுள்ளதாகக் கூறியுள்ள உஷா ராஜேந்தர், 'படத்தின் இசைப் பணிகளுக்கு உரிமையாளராக டி.ராஜேந்தர் இருப்பதால் பாடல்கள் மூலம் ஈட்டப்படும் வருவாயில் சரிபாதிப் பங்கைப் பெறுவதற்கு அவருக்கு உரிமை உண்டு' என மனுவில் தெரிவித்துள்ளார்.
காப்புரிமை சட்டத்தின்படி இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 30-ஆம் தேதியன்று வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனு தொடர்பாக ஏ.வி.எம் நிறுவனம் மற்றும் டபிள்யு எல் எபிக் மீடியா நிறுவனம் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
'கண்டறிவதற்கே ஓராண்டு...'
"டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு யூட்யூப், இன்ஸ்டாகிராமில் பலரும் 'உயிருள்ளவரை உஷா' படத்தின் பாடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்" என்கிறார், டி.ராஜேந்தரின் வழக்கறிஞர் தியாகராஜன்.
இவ்வாறு பயன்படுத்தப்படுவதைக் கண்டறிவதற்கே தங்களுக்கு ஓராண்டு தேவைப்பட்டதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், "ஏ.வி.எம் ஆடியோ நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஆனால், டபிள்யு எல் எபிக் மீடியா நிறுவனம் சமூக வலைதளங்களில் பாடல்களைப் பயன்படுத்தி வருகிறது." என்கிறார்.
"படத்தில் பாடல்களை எழுதி டி.ராஜேந்தரே இசையமைத்தார். ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கு இசை தொடர்பாக முழு உரிமையும் உள்ளது என வாதிட்டாலும் படத்தின் உரிமையாளராக அவரின் மனைவி உஷா ராஜேந்தர் தான் இருக்கிறார்," என்கிறார்.
படத்தின் ஆடியோ உள்பட எந்த உரிமையையும் ஏ.வி.எம் நிறுவனம் உள்பட யாருக்கும் டி.ஆர்.ராஜேந்தர் தரப்பில் வழங்கவில்லை எனக் கூறும் தியாகராஜன், "ஆடியோவை கேசட்டுகளாக தயாரித்து விற்பதற்கு மட்டுமே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது." எனக் கூறுகிறார்.
'இசைப் பணி என்ற அடிப்படையில் இசையமைப்பாளருக்கு ராயல்டியை கொடுப்பதற்கு காப்புரிமை சட்டத்தில் விதிகள் உள்ளன. இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் அப்படி எந்தத் தொகையும் டி.ராஜேந்தருக்கு வழங்கப்படவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தரிடம் இதுதொடர்பாக பிபிசி தமிழ் பேசியது. "இதுகுறித்து விரைவில் பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "ஏ.வி.எம் ஆடியோ நிறுவனத்தின் மீதுதான் டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிறுவனம், தற்போது பல கைகளுக்கு மாறிவிட்டது." எனக் கூறினார்.
சினிமா தொடர்பான நடவடிக்கைகளை ஏ.வி.எம் நிறுவனம் கைவிட்டுவிட்டதாகக் கூறிய அவர், "இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்." என அவர் பதில் அளித்தார்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு