காணொளி: இரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான மோதல் மாறுபட்டதாக இருப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, காணொளி: இரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான மோதல் மாறுபட்டதாக இருப்பது ஏன்?
காணொளி: இரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான மோதல் மாறுபட்டதாக இருப்பது ஏன்?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான இந்த மோதல், பல தசாப்தங்களாக சர்வதேச நடத்தையை நெறிப்படுத்தி வந்த விதிகள் தங்கள் முக்கியத்துவத்தை இழப்பதாக தெரியும் ஒரு புதிய உலக ஒழுங்கின் கீழ் நடைபெறும் முதல் பெரிய மோதலாக பார்க்கப்படலாம்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகான பெரும்பாலான சமயங்களில், போர்களும் ராஜீய முன்னெடுப்புகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சபை போன்ற அமைப்புகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்புக்கு உள்ளேயே முறையாக இருந்தன. அந்த விதிகள் மீறப்பட்டால் கூட, அரசுகள் பொதுவாக அந்த கட்டமைப்புக்குள்ளேயே தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்றன.

பெரும்பாலும் சட்டரீதியான வாதங்கள், ராஜீய ரீதியான ஆலோசனைகள் அல்லது சர்வதேச கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்தே ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், தற்போதைய போரில், அவை முக்கியத்துவம் இழந்திருப்பதாக தெரிகிறது. வியூக ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சர்வதேச சட்ட கட்டமைப்புகளுக்கு உட்படுவதை காட்டிலும், ராணுவ கணக்கீடு, அரசியல் அல்லது பாதுகாப்பு கணக்கீடுகளின்படி அதிகம் எடுக்கப்படுவதாக தெரிகிறது.

இது போன்ற சூழலில் செயல்படுவது இரானுக்கு புதிதல்ல. பல தசாப்தங்களாக, அந்த நாடு சர்வதேச தடை மற்றும் அரசியல் ரீதியான தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளது. ஆனால், அதை மீறுவதற்காக காலப்போக்கில் வலையமைப்புகளையும் பொருளாதார வழிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. உலகின் மிக விரிவான பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருந்தாலும் இரான் தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. பிராந்தியத்தில் தனது செல்வாக்கையும் பராமரித்து வருகிறது.

சர்வதேச சட்டங்கள் உடனடியாக தன்னை தடுக்காத சூழல்களில் செயல்பட்டு இஸ்ரேலும் பழகிவிட்டது.

கடுமையான அச்சுறுத்தல் உருவாகிறது என அதன் தலைவர்கள் நம்பும்போது, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதை இஸ்ரேல் ராணுவ கோட்பாடாக கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்துவது, பெரும் பலத்தை பயன்படுத்துவது இஸ்ரேலின் தொடர்ச்சியான அணுகுமுறையாக இருந்து வந்துள்ளன.

சமீப ஆண்டுகளில், காஸா போர் போன்ற விவகாரத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச சட்ட மன்றங்களில் தீவிர ஆய்வுக்கு உள்ளாகியுள்ளன.

ஆனால், இந்த சர்வதேச கட்டமைப்புக்குள் அமெரிக்கா மாறுபட்ட நிலையில் உள்ளது. 1945-க்கு பிறகான சர்வதேச ஒழுங்கில் அமெரிக்கா மற்ற நாடுகளை போல வெறும் பங்கேற்பாளராக மட்டும் இருக்கவில்லை. அதை வடிவமைப்பதிலும் நிலைநிறுத்துவதிலும் பிரதான பங்கை வகித்தது.

சமீபத்திய தசாப்தங்களில், அந்த கட்டமைப்பை வெளிப்படையாக தவிர்க்க அமெரிக்கா மிக நெருக்கமாக வந்த தருணம் என்றால் இராக் போரை சொல்லலாம். அப்போதும் கூட, அமெரிக்கா அந்த தலையீட்டை ஒரு பரந்த கூட்டணி முயற்சியின் பகுதியாக காட்ட முயன்றது. போரின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து அதிகம் கேள்வி எழுந்தாலும், அமெரிக்கா அந்தப் போரை பரந்த சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக சித்தரிக்கவே முயன்றது.

ஆனால், தற்போதைய மோதலில் அனைத்து தரப்பிடமுமே சர்வதேச சட்டபூர்வத்தன்மைக்கான முக்கியத்துவம் குறைவாக காணப்படுகிறது. மூத்த தலைவர்களின் கருத்துகளே வித்தியாசமான தொனியில் உள்ளன. உதாரணமாக, மார்ச் 14ஆம் தேதி NBC ஊடகத்திடம் பேசிய டிரம்ப், தொடர் தாக்குதல்கள் இரானின் கார்க் தீவின் பெரும்பகுதியை முற்றிலுமாக அழித்துவிட்டதாக கூறினார். மேலும், வேடிக்கைக்காக நாங்கள் இன்னும் சில முறை அதைத் தாக்கக்கூடும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இத்தகைய கருத்துக்கள், நேரடியான மற்றும் ராஜீய ரீதியான செயல்முறை இல்லாத அணுகுமுறையை காட்டுகிறது.

இந்த புதிய அணுகுமுறையில், பொருளாதாரமும் முக்கிய கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சுங்க வரிகள், வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் ஆகியவை போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், நீண்டகால கூட்டாளிகளுக்கும் கூட அதிகளவில் விதிக்கப்பட்டன.

இத்தகைய கொள்கைகள் குறுகிய காலத்தில் பயனுள்ளவையாக தெரியக்கூடும். இருப்பினும், இதன் நீண்டகால விளைவுகள் அவ்வளவு தெளிவாக இல்லை. விதிகள் அடிப்படையிலான இந்த கட்டமைப்பின் முதன்மைச் சிற்பியே அந்த விதிகளை குறைமதிப்புக்கு உட்படுத்த தொடங்கினால் பிற நாடுகளும் தங்களுக்கும் கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டதாக உணரக்கூடும்.

அத்தகைய வரம்புகளை ஒரு காலத்தில் இரான் தலைமை எவ்வாறு கையாண்டது என்பதற்கு முந்தைய மோதல்களில் இரானின் நடவடிக்கையே உதாரணம். 2025-ல் நடந்த 12-நாள் மோதல் உட்பட, முந்தைய நெருக்கடிகளின் போது, இரான் ராணுவ ரீதியாக பதிலடி கொடுத்தாலும் வியூக ரீதியான தனது எச்சரிக்கை கோடுகளை பெரும்பாலும் கடைபிடித்தது. அந்த மோதல் என்பதே சர்வதேச சட்ட கட்டமைப்பை மீறுவதாக இருந்தாலும் இரானின் பதிலடி சிறிய அளவிலும் வரம்புக்கு உட்பட்டதாகவுமே இருந்தது.

கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதெய்த் தளத்தை தாக்கிய போது கத்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு முன்கூட்டியே முறைசாரா எச்சரிக்கைகளை இரான் கொடுத்ததாக தெரிகிறது. இராக்கில் நடத்திய தாக்குதல்களின் போதும் இதே போன்ற சமிக்ஞைகள் முன்னரே காணப்பட்டன. கணிசமான சேதத்தைச் சந்தித்த பின்னரும் கூட, இரானின் பதிலடி, பெரிய அளவில் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க கவனமாக வரம்புக்கு உட்பட்டதாகவே இருந்தது.

ஆனால், தற்போதைய மோதலில் மாறுபட்டதாக உள்ளது. அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முதல் கட்ட தாக்குதல்களில், அரேபிய தீபகற்பம் முழுவதும் உள்ள அமெரிக்க தளங்கள் மீது இரான் தாக்குதலை தொடுத்தது. ராணுவத் தளங்கள், பொதுமக்கள் இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகளையும் குறிவைத்தது. அதே போல, உலகின் மிக முக்கிய எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லும் போக்குவரத்தையும் சீர்குலைத்தது.

அதன் விளைவுகள் உடனடியாக தெரிந்தன. எரிசக்தி சந்தைகள் கடுமையாக எதிர்வினையாற்றின. இந்த குறுகிய நீர்வழி கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறு, உலகளாவிய விநியோகச் சங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மற்ற பெரும் சக்திகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. எரிசக்தி விலைகள் உயர்வதால் ரஷ்யா பயனடையக்கூடும். அதே போல ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பு இருந்தபோதிலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளின் அழுத்தமும் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சர்வதேச நெறிமுறைகள் எந்த அளவிற்கு, எந்தெந்த திசைகளில் மாறக்கூடும் என்பதை சீனா அநேகமாக உன்னிப்பாக கவனிக்கும்.

இந்த விவகாரங்களின் போக்கில் ஐரோப்பாவுக்கு தற்போது குறைந்த அளவிலான செல்வாக்கே இருப்பதாக தெரிகிறது. ராஜீய முயற்சிகள் இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் பெரும்பாலும் பார்வையாளர்களாவே தங்களை உணர்கின்றன.

எனவே, தற்போது மத்திய கிழக்கில் நடக்கும் போர் 1945 முதல் சர்வதேச உறவுகளையும் அரசியலையும் வடிவமைத்து வரும் சர்வதேச அமைப்பின் நீடித்த தன்மை குறித்து பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.

அந்தக் கட்டமைப்பு தொடர்ந்து பலவீனமடைந்தால், நாடுகள் சர்வதேச விதிகளைக் குறைவாகவும், தங்களின் பலத்தை அதிகமாகவும் சார்ந்திருக்கும் கணிக்க முடியாத ஒரு சர்வதேச சூழல் உருவாகக்கூடும். அத்தகைய சூழலில் ஏற்படும் விளைவுகளை அந்த அமைப்பை முதலில் வடிவமைத்த நாடுகள் கூட முன்கூட்டியே கணிப்பது கடினம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு