காணொளி: தொடரும் தாக்குதல்கள் - வளைகுடா நாடுகள் சொல்வது என்ன?
இரானியர்கள், தங்களின் பாரசீக புத்தாண்டான நௌரூஸை கொண்டாடிவரும் வேளையில், இஸ்ரேல், இரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதே நேரத்தில், இரவு முழுவதும் இரான், ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது.
அவற்றை தடுத்து அழிக்கும் நடவடிக்கைகளால் ஏற்பட்ட பலத்த வெடிப்பு சத்தங்கள் தொடர்ந்து ஒலித்தன. நகரம் முழுவதும் சைரன்கள் முழங்கின. இரானில் இருந்து வரும் ஏவுகணைகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
முன்னதாக, இரான் அரசின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.
கடந்த சில மணிநேரங்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதுபற்றி அந்தந்த நாடுகள் சொல்வது என்ன?
இரானிலிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு தற்போது பதிலளித்து வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல்களை தடுக்க வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுவதால், மக்கள் வெடிப்பு சத்தங்களை கேட்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல குவைத்தும் தனது வான்வழி பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்குதல்களை தடுத்து வருவதால் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
சௌதியின் கிழக்கு பகுதியில் 5 டிரோன்கள் தடுத்து அழிக்கப்பட்டதாக சௌதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் சைரன்கள் ஒலிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழன் அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரானின் எரிவாயு வயலில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி பேசினார். அந்த தாக்குதலில் இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், டிரம்பின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, இரானின் எண்ணெய் வயல்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்தார்.
"இரான் தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது, யுரேனியம் செறிவூட்டவும் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கவும் முடியாத நிலையில் இருப்பதாகவும்" நெதன்யாகு கூறினார்.
கத்தாரின் முக்கிய திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி மையமான ராஸ் லஃபான் மீது இரான் நடத்திய தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் பதற்றத்தை அதிகரிக்கும் ஆபத்தான நகர்வு என்றும் கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. இது பிராந்திய நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தது.
இது குறித்த தனது சமூக வலைதளப் பதிவில், இரான் கத்தாரை குறிவைத்து நடத்திய தாக்குதல்கள், இந்த பிராந்தியத்தை பிரச்னைக்குள் இழுத்துச் செல்லும் தொடர்ச்சியான முயற்சி” எனக் குறிப்பிட்டுள்ளது.
பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி இது பற்றி பேசினார். “இத்தகைய பகைமை செயல்கள், அவற்றின் தொடர்ச்சி மற்றும் போரின் விரிவு, பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும்” என அவர் எச்சரித்தார். மேலும் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒட்டுமொத்த பொறுப்பு என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ராஸ் லஃபான் மீது இரான் நடத்திய தாக்குதலின் விளைவாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கத்தாரின் LNG ஏற்றுமதித் திறன் 17 சதவீதம் குறையும் என்று அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணையைச் சுற்றியுள்ள நிலைமையின் அதிருப்தி காரணமாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு இந்த நீரிணை வழியாகவே கடந்து செல்கிறது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய தேவையான முயற்சிகளில் பங்களிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



