இனவெறித் தாக்குதலுக்கு எதிரான பதிவை நீக்கிய ஃபேஸ்புக்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

இனவெறித் தாக்குதலுக்கு எதிரான பதிவை நீக்கிய ஃபேஸ்புக்

ஆஸ்திரியாவில் தனக்கு நேர்ந்த இனம் சார்ந்த பாகுபாடு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்து அந்நிறுவனத்தால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் இனவெறிக்கெதிரான வலைப்பூவை தொடங்கியுள்ளார்.

தனது பாரம்பரிய ஆடையை கேலி செய்ததுடன், அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிய வியன்னா நகர இளையோர் பற்றிய கின்ஷாசாவின் பதிவுகளில் மனதை புண்படுத்தக்கூடிய வகையிலான வார்த்தைகள் இருந்ததால் அதை நீக்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அணியினருக்கு கோலாகல வரவேற்பு

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியினருக்கு அந்நாட்டு தலைநகர் பாரிஸில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குரோஷியா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ், 1998ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக உலகக்கோப்பையை தட்டிச்சென்றது.

அமெரிக்காவில் உளவு பார்த்த ரஷ்ய பெண் கைது

ரஷ்ய அரசின் உளவாளியாக செயல்படும் எண்ணத்துடன், அமெரிக்க அரசியல் குழுக்களில் ஊடுருவிய 29 வயது ரஷ்ய பெண் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மரியா புட்டினா என்ற அந்த பெண் குடியரசு கட்சியினருடன் நெருக்கமான தொடர்புகளை வளர்த்ததுடன், துப்பாக்கி சார்ந்த உரிமைகளுக்கான ஆதரவாளராக செயல்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹவாயில் வெடித்து சிதறும் எரிமலை

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான ஹவாயில் வெடித்து சிதறும் எரிமலை குழப்பு (லாவா) தாக்கியதில் படகு ஒன்றில் பயணித்த குறைந்தது 13 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பின்போது சிதறி, பறந்து வந்த பாறைகளும், குப்பைகளும் தாக்கியதில் ஒருவருக்கு கால் உடைந்ததுடன், பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :