13 ஆண்டு சோகத்திற்கு மும்பை இந்தியன்ஸ் முடிவு கட்டுமா? இம்முறை சாதகமாக உள்ள 3 விஷயங்கள்

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2026 ஐபிஎல் சீசன் தொடங்கிவிட்டது. பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.

இன்று (மார்ச் 29) நடக்கும் இரண்டாவது போட்டியில் ஐந்து முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சந்திக்கிறது.

இந்தப் போட்டி மும்பையின் வான்கெடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியால், 2013 சீசன் முதலாகவே எந்த சீசனின் முதல் போட்டியிலும் வெல்லவில்லை. இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அந்த மோசமான தொடக்கங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் முடிவு கட்டுமா? அலசுவோம்.

13 சீசன்களாக தொடரும் தோல்வி

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை சீசனின் முதல் போட்டி என்றாலே அவர்களுக்கு சரியாகப் போகாது. 2013 முதல் 2026 வரை தொடர்ந்து 13 சீசன்களிலும் அந்தந்த சீசன்களின் முதல் போட்டிகளை அந்த அணி தோற்றிருக்கிறது.

2013 முதல் ஒவ்வொரு சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் ஆடிய முதல் ஆட்டத்தின் முடிவுகள்:

2013 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 ரன்களில் தோல்வி

2014 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 41 ரன்களில் தோல்வி

2015 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 7 விக்கெட்டுகளில் தோல்வி

2016 vs ரைஸிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் - 9 விக்கெட்டுகளில் தோல்வி

2017 vs ரைஸிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் - 7 விக்கெட்டுகளில் தோல்வி

2018 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - 1 விக்கெட்டில் தோல்வி

2019 vs டெல்லி கேபிட்டல்ஸ் - 37 ரன்களில் தோல்வி

2020 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - 5 விக்கெட்டுகளில் தோல்வி

2021 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 விக்கெட்டுகளில் தோல்வி

2022 vs டெல்லி கேபிட்டல்ஸ் - 4 விக்கெட்டுகளில் தோல்வி

2023 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 8 விக்கெட்டுகளில் தோல்வி

2024 vs குஜராத் டைட்டன்ஸ் - 6 ரன்களில் தோல்வி

2025 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - 4 விக்கெட்டுகளில் தோல்வி

மும்பை இந்தியன்ஸின் இந்தத் தோல்விகளுக்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. முதலில் பேட்டிங் செய்தும் தோற்றிருக்கிறார்கள். சேஸ் செய்தும் தோற்றிருக்கிறார்கள். மும்பையிலும் தோற்றிருக்கிறார்கள், எதிரணி மைதானங்களில் நடைபெற்ற ஆட்டங்களிலும் தோற்றிருக்கிறார்கள்.

இந்த 13 தோல்விகள் ஆறு வெவ்வேறு அணிகளிடம் வந்திருக்கின்றன. அதனால் தான் மும்பை இந்தியன்ஸின் இந்த தொடர் தோல்விகள் புரியாத புதிராக இருக்கின்றன.

2023 சீசனின் முதல் போட்டியைத் தோற்ற பிறகு பேசிய அப்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட், "இது மும்பை அணியோடு என்னுடைய 9வது சீசன். நாங்கள் இன்னும் சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெறவில்லை. இது விரக்தியளிக்கிறது. இருந்தாலும், இது மிகவும் கடினமான தொடர்." என்று கூறியிருந்தார்.

இப்படி தொடர்ந்து மும்பை அணிக்கும், அவர்கள் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் தரும் அந்த முதல் போட்டியின் முடிவு இம்முறை அவர்களுக்கு சாதகமாக அமைவதற்கு 3 காரணங்கள் இருக்கின்றன.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

காரணம் 1: பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் லெவன்

இந்தத் தொடரின் பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றாக பெரும்பாலான வல்லுநர்கள் கூறும் அணி மும்பை இந்தியன்ஸ். உலகத்தர பேட்டர்கள், பௌலர்கள், ஆல்ரவுண்டர்கள் அந்த அணியில் நிறைந்திருக்கிறார்கள்.

ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக், திலக் வர்மா, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, வில் ஜேக்ஸ், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா என தனி ஆளாக போட்டியை மாற்றக்கூடிய மேட்ச் வின்னர்கள் அந்த அணியில் நிரம்பியுள்ளனர்.

ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஹர்திக் பாண்டியா, நமன் திர், அல்லா கசன்ஃபர், தீபக் சஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

இந்த முதல் போட்டியில் மேற்கண்ட பட்டியலே மும்பையின் பிளேயிங் லெவனாக இருக்கலாம். இவர்கள் போக ஷார்துல் தாக்கூர், அஷ்வனி குமார், மயாங்க் மார்க்கண்டே போன்ற ஐபிஎல் தொடரில் சோபித்த வீரர்களுள் ஒருவர் இம்பேக்ட் வீரராக ஆடக்கூடும்.

வில் ஜேக்ஸ் மற்றும் மிட்செல் சேன்ட்னர் இந்தப் போட்டியில் ஆடமாட்டார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே சொல்லியிருக்கிறார். இருந்தாலும் அந்த இடத்தில் விளையாடக்கூடிய ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், அல்லா கசன்ஃபர் இருவருமே தரமான டி20 வீரர்கள். அதனால், அவர்களும் அதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

போக, கடந்த சில நாள்களாக பும்ராவின் ஃபிட்னஸ் பற்றி கேள்விகள் எழுந்த நிலையில், அவர் முதல் போட்டியில் விளையாடுவதற்குத் தயாராக இருப்பதாக ஜெயவர்தனே கூறியிருக்கிறார். அதுவே அந்த அணியைப் பன்மடங்கு பலப்படுத்திவிடுகிறது.

காரணம் 2: காயங்களால் அவதிப்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே பல பிரச்னைகள் வந்துவிட்டன.

முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்கச்சொல்லி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அடுத்ததாக 18 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட மதீஷா பதிரனா டி20 உலகக் கோப்பையின் போது காயம் அடைந்து இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

அடுத்ததாக அனியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவும் காயமடைந்து சீசனிலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பும் அதே பாதையில் பயணித்தார்.

இப்படி பல வீரர்களை இழந்திருக்கும் அவர்களின் வேகப்பந்துவீச்சு யூனிட் பெரிதாக பலவீனமடைந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இன்னும் யார் அந்த அணியின் ஓப்பனர்கள், எந்த 4 வெளிநாட்டு வீரர்களைக் களமிறக்கப் போகிறார்கள், எந்த விக்கெட் கீப்பரை பிரதானப்படுத்தப் போகிறார்கள் என எந்தக் கேள்விக்கும் யாரிடமும் தெளிவான பதில் இல்லை.

ஒவ்வொருவர் கணிக்கும் கேகேஆர் பிளேயிங் லெவனிலும் டிம் ஷெஃபர்ட், ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, தேஜஸ்வி சிங் என இப்படி நான்கு வித்தியாசமான கீப்பர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அஜிங்க்யா ரஹானே, கேமரூன் கிரீன், ரமன்தீப் சிங், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி என இந்த 5 வீரர்கள் மட்டுமே உறுதியாக விளையாடுவார்கள் என்று சொல்ல முடியும்.

இப்படி ஒரு உறுதித்தன்மை இல்லாமல் இருப்பது எந்த அணிக்குமே பாதகமான விஷயம் தான். ஒரு புதிய பயிற்சியாளரின் தலைமையில் இப்படி பல கேள்விகளோடு களமிறங்கும் அணி மீது பெரும் நெருக்கடி இருக்கும்.

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணியில் இது அப்படியே நேரெதிராக இருக்கிறது. எனவே இது ஹர்திக் பாண்டியாவின் அணிக்கு கூடுதல் சாதகம்.

காரணம் 3: மும்பைக்கு சாதகமாக இருக்கும் வான்கடே வரலாறு

நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மோதிய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸே பெருமளவு ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

இதுவரை இவ்விரு அணிகளும் 35 போட்டிகளில் மோதியிருக்கின்றன. கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி அந்த 35 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 24-இல் வெற்றி பெற்றிருக்கிறது. கேகேஆர் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. கொல்கத்தாவை விட இரு மடங்குக்கும் அதிகமான போட்டிகளை வென்றிருக்கிறது மும்பை.

அதுவே இந்த அணிகள் வான்கடேவில் மோதிய போட்டிகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அது இன்னும் பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது. ஸ்போர்ட்ஸ்டார் தரவுகளின்படி வான்கடேவில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் பத்தில் மும்பை இந்தியன்ஸே வென்றிருக்கிறது. இரண்டு போட்டிகளில் மட்டுமே நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த வரலாறு மும்பை இந்தியன்ஸுக்கு உளவியல் ரீதியாக சாதகமான அம்சமாக அமையலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு