You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் போர்: டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள்
- எழுதியவர், ஆண்டனி ஜுர்ச்செர்
- பதவி, வட அமெரிக்க செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதிலிருந்து அமெரிக்க மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இரண்டாவது முறையாக அதிபராகும் எவரும் சந்திக்கக்கூடிய சரிவு தான் இது. ஆனால் டிரம்ப் சந்திக்கும் இந்த முதல்கட்ட சரிவு விலைவாசி மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவினம் அதிகரித்ததால் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை பிரதிபலிக்கிறது. இந்த பிரச்னைகள் கடந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயக் கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
தி டவுன்பேலட் என்கிற தேர்தல் ஆய்வு இணையதள தரவுகளின்படி, சில மாவட்டங்களில் 2024 அதிபர் தேர்தலை விட 2025-இல் நடைபெற்ற சிறப்பு தேர்தலில் சராசரியாக 13% வரை ஜனநாயகக் கட்சியினர் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளனர்.
இரானில் நடைபெற்று வரும் போர் இந்தப் பொருளாதார கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.
கருத்துக்கணிப்பு நிறுவனமான இப்சாஸ், டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் பொருளாதாரத்தை அவர் கையாண்ட விதத்திற்கு 43% அமெரிக்க மக்கள் 'ஏற்பு' தெரிவித்திருந்தனர். 2025-ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று அது 35% ஆக சரிந்து, அந்த ஆண்டு முழுவதும் இதே நிலையில் நீடித்தது.
இரான் போரில் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் எரிபொருள் விலை ஒரு அமெரிக்க கேலனுக்கு (Gallon) சராசரியாக 4 டாலர் வரை உயர்ந்தது.
அதே வேளையில் பொருளாதார விஷயத்தில் டிரம்பின் செயல்பாடு மீதான 'ஏற்பு' மதிப்பீடு 29% ஆக சரிந்தது. இது ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட குறைவான அளவு. அப்போது கொரோனா பேரிடருக்குப் பிறகான விலைவாசி உயர்வை அமெரிக்கர்கள் சந்தித்து வந்தனர்.
2024-இல் ஜனநாயக கட்சியின் தோல்விக்கு பொருளாதார அச்சமும் பங்களித்தது. கடந்த ஓராண்டாக குடியரசு கட்சியினர் அதிபர் பதவியையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது டிரம்பின் மதிப்பீட்டில் தாக்கம் செலுத்தி வருகிறது.
அரசியல் ஆய்வாளரான நேட் சில்வரின் கருத்துக்கணிப்பு சராசரியின்படி, இரண்டாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் டிரம்புக்கு 52% ஆதரவு இருந்தது.
இது கடந்த கால அதிபர்கள் யாரும் பெற்றிராதது இல்லையென்றாலும், சர்ச்சைக்குரிய தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை அமெரிக்கர்களிடமிருந்து ஆதரவு கிடைப்பது, இந்த தேர்தல் முடிவுகளைப் பெற்று குடிவரவு, வரிகள், அரசாங்க செலவினக் குறைப்பு மற்றும் வரி சீர்திருத்தம் மீதான தனது அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க டிரம்பை அனுமதித்தது.
எனினும், பிப்ரவரி 28-ஆம் தேதி இரான் போர் தொடங்கிய போது 42% அமெரிக்கர்களே டிரம்புக்கு ஆதரவாக இருந்தனர். இந்த வாரம் அது 40% ஆக இருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இடைக்கால தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ள நிலையில் பதவியில் இருக்கும் அதிபருக்கு இது ஆபத்தான ஒரு கட்டம். இரான் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, எவ்வளவு காலம் அது உலகளாவிய பொருளாதாரத்தைப் பாதித்து செலவினங்களை அதிகரிக்கிறதோ, அந்த அளவிற்கு ஆபத்தும் இருக்கிறது.
இந்த வாரம், டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகரில் நடைபெற்ற வலதுசாரி அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அதிக ஈடுபாடு கொண்ட வாக்காளர்களின் பழமைவாத அரசியல் செயல்பாட்டு மாநாட்டு கூட்டத்தில் (Conservative Political Action Conference) நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலின் முக்கியத்துவம் ஒரு பொதுவான விவாதப் பொருளாக இருந்தது.
"இடதுசாரிகள் வென்று, நாம் ஒவ்வொரு நாளும் போராடும் இந்த நோக்கங்களை எடுத்துச் செல்ல நாம் அனுமதிக்க முடியாது," என வடக்கு கரோலினா செனட் வேட்பாளரும் குடியரசு கட்சியின் தேசிய குழுவின் முன்னாள் தலைவருமான மைக்கேல் வாட்லி தெரிவித்தார்.
ஜனநாயக கட்சியினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், "பதவி நீக்க தீர்மானம், புரளிகள், விசாரணைகள் மற்றும் வழிதவறிய ஒரு நிகழ்ச்சி நிரல்" தான் இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
பெரும்பாலான அமெரிக்க மக்கள் தொடக்கத்திலிருந்தே அமெரிக்க ராணுவ தலையீட்டிற்கு எதிராக இருந்தபோதிலும், இரான் உடனான போர் தொடங்கியதில் இருந்து டிரம்ப் மீதான 'ஏற்பு' மதிப்பீடு பெரிதாக சரியவில்லை. அதாவது அவருக்கான ஆதரவில் பெரியளவில் சரிவு இல்லை.
பியூ ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, பொருளாதார கவலைகளுக்கு மத்தியிலும் டிரம்பின் அரசியல் அடித்தளம் அவருக்கு ஆதரவாக இருப்பதே அதற்கு காரணம்.
வெளிநாட்டு சிக்கல்களில் இருந்து அமெரிக்காவை வெளியே கொண்டு வரும் அவரது தேர்தல் வாக்குறுதிகளைக் கடந்தும் கட்சியின் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து ஆதரவு கிடைப்பது டெக்சாஸில் நடைபெற்ற மாநாட்டில் வெளிப்பட்டது.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
எரிவாயு விலை உயர்வு பற்றி பேசிய பால் ஹீரே, "பின்னர் கூடுதலாக செலுத்துவதை விட தற்போது செலுத்துவது சிறந்தது." என்றார்.
மேலும் அவர், "அந்தப் பிராந்தியத்தில் அணு ஆயுதம் கொண்ட இன்னொரு நாடு வருவதை நீங்கள் விரும்புவீர்கள் என நான் நினைக்கவில்லை. எனவே அந்த விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்." எனத் தெரிவித்தார்.
சமீபத்திய குயின்னிபியாக் பல்கலைக்கழக கருத்துக்கணிப்பின்படி, 86% குடியரசுக் கட்சியினர் இரானில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர் மற்றும் 80% பேர் டிரம்ப் அதனை கையாளும் விதத்திற்கு ஒப்புதல் அளிக்கின்றனர். பதிவான ஒட்டுமொத்த வாக்காளர்களில் இது முறையே 39% மற்றும் 34% என உள்ளது.
டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதிலிருந்து செய்த அனைத்தையும் ஜனநாயக கட்சியினர் எதிர்த்து வந்துள்ளனர். ஆனால் தற்போது நடுநிலை வாக்காளர்களும் டிரம்புக்கு எதிராக மாறி வருகின்றனர்.
2024-இல் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது.
தற்போது அரசியல் சூழல்கள் மாறாத பட்சத்தில் நவம்பரில் நடைபெறும் தேர்தலில் டிரம்ப் பின்னடைவைச் சந்திக்க நடுநிலை வாக்காளர்களின் எதிர்ப்பு பங்களிக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு